கலைஞருக்கே வெற்றி: மெரினாவில் இடம் ஒதுக்க ஆணை; தொண்டர்கள் ஆரவாரம்
By DIN | Published on : 08th August 2018 10:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் இடம் ஒதுக்கிக் கொடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
போராட்டமே வாழ்க்கையாகக் கொண்ட போராளி கலைஞர் கருணாநிதியின் மரணத்துக்குப் பிறகான போராட்டத்திலும் அவருக்கு வெற்றியே கிட்டியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு எடுத்து வைத்த பலமான வாதங்களையும், தாக்கல் செய்த ஆவணங்களையும் தாண்டி, கருணாநிதி எனும் மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
எம்ஜிஆர் சமாதியில் ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்பட்டன. சென்னை மெரினாவில் கலைஞரை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் தமிழக மக்களின் ஒருமித்த எண்ணமாக இருந்தது.
இதுவரை 13 முறை சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே காணாத கருணாநிதி, மரணத்துக்குப் பிறகான சட்டப் போராட்டத்திலும் வெற்றியே பெற்றுள்ளார். போராளிக்கு போராட்டங்களும் புதிதல்ல. தோல்விகளும் புதிதல்ல. சில முறை ஆட்சியை இழந்தாலும், ஒரு முறை கூட தேர்தலில் தோல்வியடையாத கருணாநிதிக்கு எங்கும் வெற்றி, எதிலும் வெற்றியே.