90's கிட்ஸ்களிடமும் திராவிடத்தை கொண்டு சேர்த்த 95 

பெரியார், அண்ணாவின் திராவிடத்தை, அதன்வழி வந்த கருணாநிதி 90's கிட்ஸ் வரை அதை கொண்டு வந்து சேர்த்துள்ளார்.
90's கிட்ஸ்களிடமும் திராவிடத்தை கொண்டு சேர்த்த 95 

பெரியார், அண்ணாவின் திராவிடத்தை, அதன்வழி வந்த கருணாநிதி 90's கிட்ஸ் வரை அதை கொண்டு வந்து சேர்த்துள்ளார். 

திமுக தலைவராக 50-ஆவது ஆண்டு, முரசொலி பத்திரிகை நிறுவனராக 75 ஆண்டுகள், சினிமா, இலக்கியம் என கலைத்துறையில் 70 ஆண்டுகள், சட்டப்பேரவை பணிகளில் 60 ஆண்டுகள் என 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்தவருக்கு காலம் கட்டாய ஓய்வை அளித்துள்ளது. 

கருணாநிதி என்பது 50 ஆண்டுகால அரசியல் வரலாறு, அந்த வரலாற்று ஆழத்தை அறிவதற்கு போதிய அரசியல் அறிவும், அனுபவமும் அவசியமும் என்கிறது ஒரு கூற்று. ஆனால், அவருடைய அரசியல் ஆழத்தை அறிய போதிய அனுபவம் இல்லாத, பக்குவம் இல்லாத 90's கிட்ஸிடமும் கருணாநிதி சென்றடைந்திருக்கிறார் என்பது உண்மை. 

பொதுவாக 90's கிட்ஸ் மத்தியில் கருணாநிதி பெயரை கேட்டால், பள்ளிக்கு விடுமுறையா? என்ற கேள்வியை நிச்சயம் கேள்வியை எதிர்பார்க்கலாம். ஆனால், தனது மறைவுக்காக காத்திருந்த இந்த 90's கிட்ஸ்களிடம் கருணாநிதி எந்தவித மாற்றங்களை கொண்டுவந்தார் தெரியுமா?

90's கிட்ஸ்கள் 'அலி' என்ற சொல்லில் இருக்கும் வன்மத்தை அறியாமல் ஒருவரை கேலி செய்வதற்கு மிகவும் எளிதாக பயன்படுத்துவர்.  அவர்களுக்குள் இருந்த அந்த மிகவும் மோசமான வழக்கத்தை அவர்களுக்கு அறியாமலேயே 'திருநங்கை' என்ற வார்த்தையை உருவாக்கி கிள்ளி எறிந்தவர் தான் கருணாநிதி. அதன்பிறகு, அலி என்ற சொல் மூலம் கேலி செய்யும் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. 

அதே 90's கிட்ஸ்கள் படித்து முடித்த பிறகு மென்பொருள் பொறியியல் உலகுக்குள் தள்ளப்பட்டனர். அதற்காக புதிய டைடல் பார்க் மூலம் எண்ணற்ற வேலை வாய்ப்புகளை கருணாநிதி எளிதில் ஏற்படுத்தித் தந்தார் .

பெண்களுக்கும் சம உரிமை என்ற விவாதத்தை 90's கிட்ஸ் மத்தியில் அவர்களுக்கு தெரியாமலேயே விதைத்தவர் கருணாநிதி. கருணாநிதியின் மறைவுக்கு ஒரு பெண் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், குடும்பத்தின் முதல் பட்டதாரி நான், பல மாநிலங்களுக்கு சென்றுள்ளேன், எம்என்சி நிறுவனத்தில் பணிபுரிகிறேன், எனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ்கிறேன் என்று குறிப்பிட்டு கருணாநிதிக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்த பதிவு தான் அதற்கு உதாரணம்.  

'செம்மொழியான தமிழ்மொழியாம்' என்ற வாசகத்தை ரஹ்மான் வாயிலாக கருணாநிதி தான் 90's கிட்ஸுக்கு ஊட்டினார். 

இவையனைத்தையும் விட தமிழகத்தில் திராவிட தலைவர்கள் என பலர் செயல்பட்டு வந்த போதிலும், திராவிடக் கொள்கையின் மூத்தவர்களான பெரியார் மற்றும் அண்ணாவின் பெயரை  அதிக முறை உச்சரித்து 90's கிட்ஸ்களிடம் கொண்டு வந்து சேர்த்த பெருமை கருணாநிதியையே சேரும்.

பெரியார், அண்ணா பெயர்களை உச்சரிப்போடு மட்டும் தங்கிவிடாமல் இருக்க அவர்களது கொள்கை ரீதியிலான திட்டங்களை செயல்படுத்தி, அவர்களது சித்தாந்தத்தையும்  90's கிட்ஸிடம்  கருணாநிதி கொண்டு வந்து சேர்த்துள்ளார்.     

கவிஞர் வைரமுத்து-வின் கூற்றை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். 

"பெரியார், ஆட்சிப் பொறுப்பை மறுத்திருந்தார். காலம் அண்ணாவுக்கு ஆயுளை மறுத்திருந்தது. ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே பெற்று இத்தனை ஆண்டுகள் கலைஞர் இயங்கியதால்தான் பெரியார், அண்ணா என்ற தத்துவங்கள் கணிப்பொறித் தலைமுறைக்குக் கடத்தப்பட்டன" என்றார்.   

பெரியார், அண்ணா வழி வந்த கருணாநிதி அவர்கள் தூவிய விதைகளை இதுவரை ஓயாது உழைத்து பாதுகாத்து 90's கிட்ஸ் வசம் ஒப்படைத்துள்ளார். இதற்கு பின் இந்த திராவிடத்தின் சமூகநீதி சித்தாந்தங்கள் தமிழகத்தில் எப்படி பயணிக்கப்போகிறது என்பது தான் தற்போது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com