அண்ணாவின் கண்டிப்பான அறிவுரையை கேட்காத கருணாநிதி!

தன்னிகரற்றத் தலைவராக விளங்கிய கருணாநிதி ஒரு சிறந்த பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். திருவாரூரில் தொடங்கிய அவரது எழுத்துப் பணி சுமார் 80 ஆண்டுகளுக்கும்  மேல் நீடித்தது.
அண்ணாவின் கண்டிப்பான அறிவுரையை கேட்காத கருணாநிதி!


தன்னிகரற்றத் தலைவராக விளங்கிய கருணாநிதி ஒரு சிறந்த பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். திருவாரூரில் தொடங்கிய அவரது எழுத்துப் பணி சுமார் 80 ஆண்டுகளுக்கும்  மேல் நீடித்தது.

மாணவர் நேசன் என்ற கையெழுத்து ஏடு ஒன்றை நடத்தி வந்த கருணாநிதிக்கு அப்போது வயது 15 தான். 1938ம் ஆண்டுகளில், கருணாநிதியும், அவருடன் படித்த மாணவர்களும் இணைந்து நடத்திய மாணவர்  நேசன் என்ற கையெழுத்து ஏடு மிகவும் பிரபலம். கருணாநிதியின் எழுத்துக்கு இது ஒரு தொடக்கமாக அமைந்தது.

பிறகு முரசொலி உருவானது. வாரம் ஒரு முறை வெளியாகும் முறையில் முரசொலி மாறிய போது, அதன் பிரிண்டிங் செலவுக்காக தனது வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் விற்றதாக கருணாநிதி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரிண்டிங் பிரஸ்ஸில் இருந்து முரசொலி பேப்பரை தனது தலையில் சுமந்து சென்று திருவாரூர் சாலைகளில் விநியோகிப்பாராம். ஆனால் முதல் முறையாக அச்சில் கருணாநிதி என்ற தனது பெயரை பார்த்தது 1942ம் ஆண்டு திராவிட நாடு இதழில் வெளியான இளமை பலி என்ற கட்டுரை மூலமாகத்தான். தனது பெயரை திராவிட நாடு இதழில் பார்த்து அவர் உற்சாகம் அடைந்தார்.

அதே சமயம் திராவிட நாடு ஆசிரியர் அண்ணா ஒரு கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாரூருக்கு வந்திருந்தார். அப்போது திராவிட நாடு இதழுக்கு கட்டுரை அனுப்பும் கருணாநிதியின் பெயர் நினைவுக்கு வர அவரை சந்திக்க விரும்பினார் அண்ணா.

அப்போது மு. கருணாநிதி குறித்து விசாரித்தார். அவரது கண் முன் வந்து நின்றவரைப் பார்த்து லேசாக அல்ல கடுமையாக அதிர்ந்தே போனார். ஆம் அவர் முன் நின்றது பள்ளிச் சிறுவன் கருணாநிதி.

கருணாநிதியைப் பார்த்து அண்ணா சொன்னது, இனிமேல் எழுதுவதை நிறுத்திவிடு. படிப்பில் கவனத்தை செலுத்து என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

ஆனால், பள்ளிச் சிறுவனாக இருந்த கருணாநிதி, அண்ணாவின் அந்த கண்டிப்பான அறிவுரையை ஏற்கவில்லை. ஆனால் அவரது துடிப்பான எழுத்தால் ஒரு தலைவனாக உருவாகி பின்பு அண்ணாவை தொடரும் நிலைக்கு உயர்ந்தார். ஒரு சமயம் பெரியார் என்று அன்போடு அழைக்கப்படும் ஈவெ ராமசாமியின் குடியரசு நாளேட்டிலும் உதவி ஆசிரியராக கருணாநிதி பணியாற்றினார்.

அன்று அண்ணாவின் பேச்சைக் கேட்காமல் போன தம்பி கலைஞர் கருணாநிதி, இன்று தொண்டர்களின் கண்ணீர் கடலில் மிதந்தவாறு அண்ணாவின் நிழலில் இளைப்பாற அவரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com