முழு அரசு மரியாதையுடன் மெரினாவில் நல்லடக்கம் ஆனார் கருணாநிதி!

உடல் நலக் குறைவால் உயிரிழந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முப்படை வீரர்களின் மரியாதையுடன் மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முழு அரசு மரியாதையுடன் மெரினாவில் நல்லடக்கம் ஆனார் கருணாநிதி!

உடல் நலக் குறைவால் உயிரிழந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முப்படை வீரர்களின் மரியாதையுடன் மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மாலை 4 மணியளவில் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக அண்ணா சமாதிக்குக் கொண்டு வரப்பட்டது.

சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடந்தது. மக்களின் கண்ணீர் கடலில் மிதந்தபடி கருணாநிதியின் உடல் அண்ணா சமாதிக்குக் கொண்டு வரப்பட்டது.

இறுதிச் சடங்கில் சந்திரபாபு நாயுடு, ராகுல் காந்தி, பொன் ராதாகிருஷ்ணன், தேவெ கௌடா, குலாம் நபி ஆசாத், தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். இறுதியாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இறுதி அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை அளித்தனர். முப்படை வீரர்களின் இசை வாத்தியங்கள் முழங்கின. 

மு.கருணாநிதியின் மீது  போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை ராணுவ வீரர்கள் எடுத்து மடித்து மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்கள். கவலை தோய்ந்த முகத்துடன் தேசியக் கொடியை பெற்றுக் கொண்டு அவர் சென்றதும், மு.க. அழகரி, ராஜாத்தி அம்மாள், மகள் செல்வி, மருமகள் துர்கா, தமிழரசு என  குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து தங்களது குடும்பத்தின் மூத்தத் தலைவருக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

இறுதியாக க. அன்பழகனும், மு.க. ஸ்டாலினும் கருணாநிதி உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். பிறகு அவரது உடல் சந்தனப் பேழையில் கிடத்தப்பட்டது. ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற வாசகம் பொறித்த சந்தனப் பேழையில் அந்த வாசகத்துக்கு சொந்தக்காரரான கருணாநிதி கிடத்தப்பட்டார்.

உணர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாமலும் கருணாநிதிக்கு பிரியா விடை கொடுக்க முடியாமலும் கலங்கி நின்றார் ஸ்டாலின். சொல்லொணாத் துயரத்தை சொல்லி மாள முடியாமல் தவித்தனர் குடும்பத்தினர். சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட உடலுக்கு குடும்ப உறுப்பினர்கள் உப்பிட்டு இறுதி மரியாதை செய்தனர்.

அனைவரது கண்ணீர் தடுத்தும் முடியாமல் சந்தனப் பேழை மூடப்படுகிறது. வாழ்க வாழ்க என்ற வாழ்த்து முழக்கத்துடன் பிரியாவிடை பெறுகிறார் கருணாநிதி. 

நல்லடக்கம் செய்ய தோண்டப்பட்ட குழியில், அவரது சந்தனப் பேழை மெல்ல இறக்கப்படுகிறது. கூடியிருக்கும் மக்களின் கதறல் விண்ணை முட்டுகிறது. 21 குண்டுகள் முழங்க திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com