நினைத்தது நடந்திருக்கிறது!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெற வைப்பது, திமுகவினரால் திட்டித் தீர்க்கப்பட்டு
நினைத்தது நடந்திருக்கிறது!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெற வைப்பது, திமுகவினரால் திட்டித் தீர்க்கப்பட்டு, அதன் வழியே அதிமுக தொண்டர்களிடையே செல்வாக்குப் பெறுவது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க முற்பட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
அதிமுக அமைச்சர்களிலேயே சிலர் அண்ணா சமாதிக்கு அருகில் திமுகவின் தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கி விடலாம் என்று கருத்துத் தெரிவித்தும்கூட, முதல்வர் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது பலரையும் வியப்படையச் செய்தது. தில்லியிலிருந்து பிரதமர் அலுவலகமும், உள்துறை அமைச்சகமும் தலையிட்டு இடம் ஒதுக்க உத்தரவிட்டால் அவமானமாகப் போய்விடும் என்று சில அமைச்சர்களும், அதிகாரிகளும் கருத்துத் தெரிவித்தும்கூட, முதல்வர் மெளனம் காத்து அவர்களை ஆச்சரியப்படுத்தினார்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல்நிலை மோசமடைந்து, கடந்த செவ்வாய்க்கிழமை உயிர் பிரியும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கருணாநிதிக்கு இறுதி நிகழ்வுகளை நடத்தவும், அவர் விரும்பியபடியே அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்யவும் திமுக தலைமை முடிவு செய்தது.
இதற்காக முதல்வரும், பொதுப்பணித் துறைக்கு பொறுப்பு வகிப்பவருமான எடப்பாடி கே.பழனிசாமியை திமுகவினர் அணுகினர். முதலில் எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்த போதும் அதற்கு அனுமதி தரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த போதும், அண்ணா நினைவிடத்தில்தான் அடக்கம் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பில் கருணாநிதியின் உடலை பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கவும், அடக்கம் செய்வதற்கு அண்ணா நினைவிடத்தில் இடமும் கோரப்பட்டது. முதல் கோரிக்கையை ஏற்ற முதல்வர் பழனிசாமி தரப்பு, இரண்டாவது கோரிக்கையை ஏற்க மறுத்தது. இதனால், குழப்பத்தில் ஆழ்ந்தது திமுக.
ஆனாலும், கருணாநிதி மரணம் குறித்த அதிகாரப்பூர்வ செய்தியை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 7) மாலை அறிவித்தனர். இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடுகளைச் செய்த அதே வேளையில், அண்ணா நினைவிடத்தில் இடம் தரப்படவில்லை என்ற தகவலையும் பொது வெளியில் போட்டு உடைத்தனர். இதையடுத்து, மெரீனாவில் இடம் வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்தது.
அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய இடம் வேண்டுமெனக் கேட்ட திமுகவின் மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசு, சட்டச் சிக்கல்கள் மற்றும் வழக்குகள் இருப்பதைச் சுட்டிக் காட்டியது. இதையடுத்து, வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக ஐந்து மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த மனுக்கள் வேறு ஏதுமில்லை. சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பதைப் பிரதான கோரிக்கையாகக் கொண்ட மனுக்களாகும். இதுபோன்ற சட்டச் சிக்கல்கள் இருப்பதால் அண்ணா நினைவிடத்தில் மறைந்த கருணாநிதிக்கு இடம் வழங்க வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்தது.
தங்களது வழக்குகளால் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் போய் விடக் கூடாது என எண்ணிய மனுதாரர்களே தங்களது வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். திரும்பப் பெற்றனர். இது, அதிமுகவினர் தங்களுக்குக் கிடைத்த மௌன வெற்றியாகப் பார்க்கிறார்கள்.
கடந்த இரண்டு மூன்று நாள்களாக அண்ணா சமாதியில் கருணாநிதியை அடக்கம் செய்வது குறித்த விவாதம் இழுத்தடிக்கப்பட்டிருந்தபோது, கருணாநிதி முதல்வராக இருந்தபோது ராஜாஜி, காமராஜர் ஆகியோரை மெரீனாவில் அடக்கம் செய்ய அனுமதி மறுத்ததாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டது.
அண்ணா நினைவிடத்தில் மறைந்த கருணாநிதிக்கு இடம் கிடைத்தது திமுகவுக்குக் கிடைத்த வெளிப்படையான வெற்றி என்றால், ஜெயலலிதாவின் நினைவிடம் அங்கேயே இருப்பதை உறுதி செய்திருப்பது அதிமுகவுக்குக் கிடைத்த மறைமுக வெற்றியாகும். இதன் மூலம், ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு நீதிமன்ற வழக்குகள் மூலம் வந்த ஆபத்துகள் அகன்றிருக்கின்றன. 
அரசுத் தரப்பில் அழுத்தமான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தலைமைச் செயலர் வெளியிட்ட அறிக்கையிலும் பதவியில் இருக்கும்போது மறைந்த முதல்வர்கள் மட்டுமே மெரீனாவில் அடக்கம் செய்யப்படுவதாகவும், முன்னாள் முதல்வர்களுக்கு கிண்டியில் இடம் ஒதுக்கப்படும் வழக்கத்தை ஏற்படுத்தியதே கருணாநிதி அரசுதான் என்றும் தெரிவிக்காமல் விட்டதேகூட, வேண்டுமென்றே செய்யப்பட்டதுதான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. 
தமிழகத்தில் எப்போதும் திமுக-அதிமுகதான் பரம வைரிகள் என்பது உலகறிந்த ரகசியம். ஆனால், கடந்த சில மாதங்களாக குறிப்பாக சட்டப்பேரவை போன்ற நிகழ்வுகளில் அதிமுக-திமுக இடையே ஒத்துழைப்பு இருப்பதாக கருத்துகள் நிலவின. இந்த கருத்துகளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் இப்போது அகற்றப்பட்டுள்ளது.
கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்காக வந்திருந்த திமுக தொண்டர்கள் தங்களது தலைவரைப் புகழும் அதேவேளையில் இடம் தர மறுத்ததாகக் கூறி முதல்வர் உள்ளிட்ட அதிமுகவினரை பழித்துப் பேசினர். கருணாநிதிக்கு இடம் தர மாட்டோம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில் தெரிவித்து, தாங்கள் எப்போதும் திமுகவின் பரம வைரிகள்தான் எனத் தெரிவித்து திமுகவினரின் ஏச்சுகளையும், பேச்சுகளையும் தெரிந்தே பெற்றிருக்கிறது முதல்வர் எடப்பாடி தரப்பு.
கருணாநிதி-ஜெயலலிதா மறைவுகளுக்குப் பிறகு அவர்கள் நடத்திய காழ்ப்புணர்வு அரசியலுக்கு சுபம்' போடாமல், தொடரும்' என பகுதி இரண்டு ஆரம்பமாகி இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com