சுடச்சுட

  
  jac

  திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் பேசுகிறார் அனைத்து அரசு மருத்துவச் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன்.


  தகுதிக்கேற்ற ஊதிய உயர்வை வழங்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் திங்கள்கிழமை (ஆக. 20) தொடர் மருத்துவப் போராட்டம் நடைபெறும் என அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
  திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தகுதிக்கேற்ற ஊதிய உயர்வு குறித்த விளக்கக் கூட்டத்துக்குப் பின்னர், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலருமான சாமிநாதன் அளித்த பேட்டி:
  அகில இந்திய அளவில் தமிழ்நாடு முழுவதும் மருத்துவப் பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான தகுதிக்கேற்ற ஊதிய உயர்வை வழங்க வேண்டும் எனக் கோரி பல்வேறு கோரிக்கைகளை விடுத்தும் அரசால் இதுவரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.
  எனவே எங்களின் கோரிக்கையைத் தொடர்ந்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அனைத்து அரசு மருத்துவச் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது. அதன் ஒருபகுதியாக, ஆகஸ்ட் 20 (திங்கள்கிழமை) முதல் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் முன்பு தர்னா போராட்டம் நடைபெறும்.
  இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைப்பயணப் பேரணி, ஆகஸ்ட் 27-ஆம் தேதி நோயாளிகளுக்குப் பாதிப்பு இல்லாமல் தமிழக அரசு நடத்தும் ஆய்வுக்கூட்டம் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளைப் புறக்கணித்து ஒத்துழையாமை இயக்கம் மேற்கொள்ளுதல், செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னை கோட்டையை நோக்கி மருத்துவர்களின் நடைப்பயணப் பேரணி நடத்தப்படும்.
  இதற்குள்ளும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் செப்டம்பர் 21-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும். அவசரச் சிகிச்சைகளுக்கும், சிசுகளுக்கான சிகிச்சைப் பிரிவுக்கும் தனியே மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவர். மற்றவர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பர் என்றார்.
  பேட்டியின் போது, தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் செயலர் ஜெ.கதிர்வேல், அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் அருளீசுவரன், மாவட்டச் செயலர் சுரேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai