கீழணையிலிருந்து 2.10 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்

கீழணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சனிக்கிழமை கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 2.10 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.
கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.


கீழணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சனிக்கிழமை கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 2.10 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், சிதம்பரம் அருகே 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் பெய்து வரும் பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகளவில் உள்ளது. இந்தத் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக கீழணைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் இருந்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1.80 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி சனிக்கிழமை விநாடிக்கு 2.10 லட்சம் கன அடி வீதம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு கடலுக்குச் செல்கிறது. கீழணையில் நீர்மட்டம் அதன் உச்ச நீர்மட்டமான 9 அடியாக உள்ளது. கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் சிதம்பரம் அருகேயுள்ள கொடியம்பாளையம் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. ஆனால், அப்பகுதியில் முகத்துவாரம் தூர்வாரப்படாததால் ஆற்று நீர் முழுமையாக கடலில் சேராமல் உள்வாங்கி, அந்தப் பகுதி கிராமங்களைச் சூழ்ந்துள்ளன. 
வெள்ள அபாய எச்சரிக்கை: கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் அதிகளவில் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால், கரையோரங்களில் அமைந்துள்ள கஞ்சங்கொல்லை, கொண்டாயிருப்பு, சிறுகாட்டுர், ஆச்சாள்புரம், முட்டம், கருப்பேரி, அரசூர், ம.அரசூர், புளியங்குடி, வெண்ணையூர், முள்ளங்குடி, வல்லம்படுகை உள்ளிட்ட 25 கிராமங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
கிராமங்களில் புகுந்த வெள்ளம்: கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சிதம்பரம் அருகே கடைமடைப் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. குறிப்பாக திட்டுக்காட்டூர், கீழகுண்டபாடி, அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் ஆகிய கிராமங்கள் தீவு போலக் காட்சியளிக்கின்றன. மேலும், அருகே உள்ள பெராம்பட்டு, வேளக்குடி காலனி, சின்னகாரமேடு, அகரநல்லூர், பழைய நல்லூர், வீரன்கோயில்திட்டு, கண்டியாமேடு, எருக்கன்காட்டுப்படுகை, மடத்தான்தோப்பு ஆகிய கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. குறுவாடி, வெண்ணையூர் கிராமங்களிலும் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியேற்றப்பட்டனர். சி.அரசூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு காட்டுமன்னார்கோவில் ரோட்டரி சங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.
வெள்ளத்தில் சிக்கிய தம்பதி: கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள திட்டு பகுதியில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த ராமு (70), இவரது மனைவி பழனியம்மாள் (65) ஆகிய இருவரும் ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். இவர்களை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சேத்தியாதோப்பு டிஎஸ்பி ஜவஹருல்லா தலைமையிலான போலீஸார் மீட்டனர்.

வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம் 
காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரியின் உச்ச நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரியின் நீர்மட்டம் சனிக்கிழமை 47 அடியாக இருந்தது. ஏரியிலிருந்து சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்காக விநாடிக்கு 74 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. ஆனால், கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்ட தண்ணீர் சனிக்கிழமை நிறுத்தப்பட்டது. இருப்பினும் கீழணையில் இருந்து வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக விநாடிக்கு 500 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், சென்னை - கும்பகோணம் சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மயிலாடுதுறை வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. 
கீழணைக்கு தண்ணீர் வரத்து ஞாயிற்றுக்கிழமை 3 லட்சம் கன அடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com