தேசிய இணைய நூலகத்துடன் இணைந்து பதிப்பாளர்களை ஒருங்கிணைக்க நடவடிக்கை: அமைச்சர் பாண்டியராஜன்

தேசிய இணைய நூலகத்துடன் (என்டிஏ) இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள பதிப்பாளர்களை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.


தேசிய இணைய நூலகத்துடன் (என்டிஏ) இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள பதிப்பாளர்களை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை புத்தகக் காட்சியை அமைச்சர் பாண்டியராஜன் சனிக்கிழமை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் தேசிய மின்னணு நூலகம் என்ற இணையவழி டிஜிட்டல் நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில் கல்வி கற்பவர்கள் முதல் முதுநிலை கல்வி, ஆராய்ச்சியாளர்கள் வரை இந்த நூலகத்தைப் பயன்படுத்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய மின்னணு நூலகத்துடன் இணைந்து தமிழகத்தில் உள்ள பதிப்பாளர்களை இணைக்கும் தரவகம் விரைவில் தொடங்கப்படும். 
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ரூ.2 கோடியில் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நூலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில மாதங்களில் இந்தப் பணிகள் முடிவடையும். உயர் தமிழ் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் இந்த நூலகம் பயன்படும். 
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு நாக்' அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் சார்பில் உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு இசை, நடனத்தைக் கற்றுத் தருவதற்காக தமிழ்ப் பண்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. அதில் இந்த ஆண்டுக்குள் இரண்டு லட்சம் மாணவர்களை ஒருங்கிணைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதே போன்று தமிழை முதல் மொழியாக அல்லாமல் இரண்டாம் மொழியாக கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு தமிழ் வளர் மையம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மையங்கள், வெளிநாடுகளில் 16 இடங்கள், உள்நாட்டில் 10 இடங்கள் என மொத்தம் 26 இடங்களில் தொடங்கப்படும். முதல் மையம் புதுதில்லியிலும் இரண்டாவது மையம் மோரீஷஸிலும் தொடங்கப்பட்டுள்ளது. 
பூம்புகாரில் அகழாய்வு: இலங்கையில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் கடல் அகழாய்வுத் துறை முடக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் மூலம் பூம்புகார் போன்ற இடங்களில் கடலில் மூழ்கியிருக்கும் கப்பல்கள் கண்டறியப்பட்டு அது தொடர்பான ஆய்வுகள் நடைபெறும்.
இதற்காக தேசிய சமுத்திரவியல் கல்வி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு செப்.30-ஆம் தேதி முடிவடையும். இந்த ஆய்வில் சுமார் 10, 000 பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com