சுடச்சுட

  

  திருவண்ணாமலை அருகே 12-ஆம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டெடுப்பு

  By  ஆரணி,  |   Published on : 01st December 2018 11:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tml

  திருவண்ணாமலை அருகே தென்முடியனூரில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்பு கல்வெட்டு வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
   திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த சு.பிரேம்குமார், தண்டராம்பட்டு வட்டம், தென்முடியனூர் பகுதியில் கள ஆய்வு செய்த போது, அங்கு ஏரியில் உள்ள தூம்பில் கல்வெட்டு இருப்பது தெரிய வந்தது.
   இதையடுத்து, அவர் அளித்த தகவலின்படி, ஓய்வு பெற்ற தொல்லியல் அறிஞர் சு.ராஜகோபால், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் த.ம.பிரகாஷ், செயலர் ச.பாலமுருகன், சுதாகர், ஸ்ரீதர், மதன்மோகன், பாவலர் வையவன் ஆகியோர் தென்முடியனூர் கிராம ஏரியில் உள்ள தூம்பின் வட பகுதியில் உள்ள கல்வெட்டை படியெடுத்தனர்.
   அதில், 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கரமசோழன் ஆட்சிக் காலத்தில் பெண்ணை வடகரை மேற்கோவலூர் நாட்டு கோவலூரைச் சேர்ந்த இலச்சியமுடையான் உழியன் மாதன் என்பவர் சோழாந்தகப் பல்லவராயன் வடுகன் ஆளவந்தான் நினைவாக இந்தத் தூம்பினை அமைத்துக் கொடுத்துள்ளார்.
   "இந்தத் தூம்பினை காப்பவர்கள் காலடியை என் தலைமேல் காப்பேன்' என்ற வாசகமும் கல்வெட்டின் இறுதியில் அமைந்துள்ளது. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் அமைத்த தூம்பு இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
   அந்தக் காலத்தில் மன்னர்கள் நீர்நிலைகளை உருவாக்கவும், அதை பாசனத்துக்கு முறைப்படுத்தவும் தூம்புகள் அமைத்த விதம் சிறப்புக்குரியதாகும். இதுபோன்று, ஏரியில் உள்ள தூம்புகளை மேலும் ஆய்வு செய்யும்போது, அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நீர்ப்பாசனம், வேளாண்மை பற்றிய வரலாறுகள் தெரிய வரும் என்று வரலாற்று ஆய்வர்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai