பள்ளிகளுக்கு நிதி கிடைப்பதில் காலதாமதத்துக்கு புதுவை அரசுதான் காரணம்

புதுவையில் நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் நிதி கிடைக்காமல் போனதற்கு நிதிநிலை அறிக்கையில் போதுமான நிதியை புதுவை அரசு ஒதுக்காததுதான் காரணம் என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கூறினார்.
பள்ளிகளுக்கு நிதி கிடைப்பதில் காலதாமதத்துக்கு புதுவை அரசுதான் காரணம்

புதுவையில் நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் நிதி கிடைக்காமல் போனதற்கு நிதிநிலை அறிக்கையில் போதுமான நிதியை புதுவை அரசு ஒதுக்காததுதான் காரணம் என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கூறினார்.
 புதுவையில் நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கான நிதியைக் குறைக்க ஆளுநர் கிரண் பேடி முயற்சி செய்வதாக முதல்வர் நாராயணசாமி வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இதுதொடர்பாக ஆளுநர் கிரண் பேடி வெள்ளிக்கிழமை கட்செவி அஞ்சல் மூலம் வெளியிட்ட பதிவின் விவரம்:
 முதல்வர் நாராயணசாமி கூறியுள்ள குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை. புதுவை நிதிநிலை அறிக்கையில் நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு போதுமான நிதியை அரசு ஒதுக்காததால் அந்தப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம், ஓய்வூதியம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது. இதற்கு அரசுதான் காரணமே ஒழிய ஆளுநர் மாளிகையல்ல.
 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை வழங்க வேண்டிய நிதிக்கான கோப்பை முதல்வர் அலுவலகம் 17.8.2018-இல்தான் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியது. கோப்பு வந்தவுடன் அதற்கு அதே நாளில் ஒப்புதல் அளித்து, ஆசிரியர்களுக்கான ஊதிய விஷயத்தில் காலதாமதம் செய்யக் கூடாது என்று அந்தக் கோப்பில் குறிப்பு எழுதி அனுப்பப்பட்டது. இதையேன் முதல்வர் நாராயணசாமி மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை?
 மேலும், நவம்பர் 27-ஆம் தேதி நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கான மானியக் கோப்புக்கு ஒப்புதல் அளித்ததுடன், இனிவரும் காலங்களில் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு புதுவை அரசு நியமித்த கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்தை வசூல் செய்தால், ஆசிரியர்களின் ஊதிய பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காணலாம் என்றும் குறிப்பு எழுதப்பட்டது.
 புதுவை அரசு நிதிநிலை அறிக்கையில் உதவி பெறும் பள்ளிகளுக்குப் போதிய நிதியை ஒதுக்காமலும், ஆசிரியர்களின் குறைகளை இதுவரை களையாமலும் இருந்து வருகிறது. மேலும், அந்தப் பள்ளிகள் தாங்களாகவே நிதியைத் திரட்டவும் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
 புதுவை யூனியன் பிரதேச சட்டம் 1963-இன்படி, கொள்கைப் பரிந்துரைகளை நிறைவேற்ற துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் தேவை. அரசுத் துறைகள் மூலம் கொள்கைப் பரிந்துரைகளை அமைச்சரவைக்கு பரிந்துரைக்க ஆளுநருக்குத்தான் அதிகாரம் உண்டு. எனவே, தவறான தகவல்களை மக்களிடம் முதல்வர் தெரிவிக்க வேண்டாம் என அந்தக் கட்செவி அஞ்சல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com