அமைச்சர் அன்பழகனின் டெண்டர் ராஜ்யம் குறித்து விசாரணை தேவை: அன்புமணி இராமதாஸ் 

உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனின் டெண்டர் ராஜ்யம் குறித்து விசாரணை தேவை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளளார். 
அமைச்சர் அன்பழகனின் டெண்டர் ராஜ்யம் குறித்து விசாரணை தேவை: அன்புமணி இராமதாஸ் 

சென்னை: உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனின் டெண்டர் ராஜ்யம் குறித்து விசாரணை தேவை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உயர்கல்வித்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த வேண்டிய அத்துறை அமைச்சரும், அவரது குடும்பத்தினரும் தருமபுரி மாவட்டத்தின் குறுநில மன்னர்களாக மாறி ஆட்சி நடத்துவது குறித்தும், அரசுத்துறை ஒப்பந்தங்களை மிரட்டிப் பறிப்பது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய அத்துமீறல்களைத் தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும், மற்ற அதிகாரிகளும் அமைச்சருக்கு ஆதரவாக செயல்பட்டு ஒப்பந்தப் பணிகளை தடுத்து நிறுத்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தருமபுரி மாவட்டத்தில் அரசுத்துறை கட்டிடங்களைக் கட்டுதல், நெடுஞ்சாலைகள் அமைத்தல், நீர்நிலைகளைத் தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் அனைத்தையும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் பெயரில் கைப்பற்றி, அரசு நிதியை கொள்ளையடித்து வருவது குறித்தும் ஏற்கனவே பலமுறை புள்ளி விவரங்களுடன் குற்றஞ்சாட்டியிருக்கிறேன். அவை அனைத்தையும் விஞ்சுவதைப் போல இப்போது அமைச்சர் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ. 2 கோடி செலவில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் திருச்சியில்  உள்ள பொதுப்பணித் துறையின் மருத்துவப் பணிகள் பிரிவுக்கான கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் கோரப்பட்டன. மொத்தம் ரூ.1.66 கோடி மதிப்புள்ள சிவில் பணிகளை ரூ.1.58 கோடியில் நிறைவேற்ற தருமபுரியைச் சேர்ந்த கிருட்டிணன் என்ற ஒப்பந்தக்காரர் முன்வந்திருந்ததால் அவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இப்பணிக்கான பூமி பூஜை கடந்த 09.06.2018 அன்று அமைச்சர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்டு, ஜூலை மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

அதன்பின் தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேளாண் பொறியியல் சார்ந்த பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் சென்னையில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் கோரப்பட்டன. அதற்காக தருமபுரி ஒப்பந்ததாரர் கிருட்டிணன், அமைச்சர் அன்பழகனின் மைத்துனர் ஏ.செந்தில்குமார், அமைச்சருக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகி ஒருவர் ஆகியோர் ஒப்பந்தப்புள்ளிகளை தாக்கல் செய்திருந்தனர். கிருட்டிணன் போட்டியிலிருந்து விலகி விட்டால் அதிக தொகைக்கு ஒப்பந்தத்தை எடுத்து லாபம் பார்க்கலாம் என அமைச்சரின் மைத்துனர் திட்டமிட்டதாகவும், அதற்காக ஒப்பந்தப்புள்ளியைத் திரும்பப் பெறும்படி அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

 ஆனால், அந்த மிரட்டலுக்கு தாம் பணியாததால் ஆத்திமடைந்த செந்தில், ‘‘தருமபுரியில் நாங்கள் தான் அரசாங்கம். எங்களை எவனும் கேள்வி கேட்க முடியாது. இந்த ஒப்பந்தப்புள்ளியை திரும்பப் பெறாவிட்டால் தமிழகத்தில் எந்த மூலையிலும் ஒப்பந்தப் பணிகளை  மேற்கொள்ள முடியாது’’ என்று  மிரட்டியதாக ஒப்பந்ததாரர் கிருட்டிணனே குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்குப் பிறகும் கிருட்டிணன் பின்வாங்காததால் இந்தப் பிரச்சினையில் நேரடியாக தலையிட்ட அமைச்சர் அன்பழகன், மாவட்டத்திலுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுத்து, கிருட்டிணன் ஏற்கனவே செய்து வந்த சுகாதாரத்துறை  இணை இயக்குனர் அலுவலகக் கட்டுமானப் பணிகளை பாதியில் நிறுத்தி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமைச்சர் அன்பழகனின் மைத்துனர் பங்கேற்கும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் மற்ற எவரும் பங்கேற்கக் கூடாது என மிரட்டுவதும், அதை ஏற்க மறுத்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் விதிகளின்படி ஒப்பந்தம் பெற்று மேற்கொண்டு வரும் மற்ற கட்டுமானப் பணிகளை மாவட்ட நிர்வாகத்திலுள்ள அதிகாரிகளின் துணையுடன் தடுப்பதும் எந்த வகையில் நியாயம்? இதை எந்த ஜனநாயகம் அனுமதிக்கிறது? என்பது தெரியவில்லை. தம்மை மிரட்டிய செந்தில்குமார் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்பந்ததாரர் கிருட்டிணன்  புகார் அளித்துள்ளார். ஆனால், அதன் மீது இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கெல்லாம் மேலாக தருமபுரி மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறை ஒப்பந்தங்களும் அமைச்சரின் குடும்பம் மற்றும் பினாமிகளுக்குத் தான் வழங்கப்படுகின்றன. அமைச்சரின் மைத்துனர் செந்தில்குமார்,  தனி உதவியாளர் பொன்வேலு ஆகியோர் தான் அனைத்துப் பணிகளையும் பினாமி பெயர்களில் எடுத்து செய்கின்றனர். பொன்வேலுவின் மனைவியை நிர்வாக இயக்குனராகக் கொண்டு சஞ்சனா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, அதற்கு ஒப்பந்தப் பணிகள் வாரி வழங்கப்படுகின்றன. அவர்களால் செய்ய முடியாத பணிகள் மட்டும், அவற்றின் மொத்த மதிப்பில் 5% கமிஷன் பெறப்பட்டு மற்றவர்களுக்கு  விற்கப்படுகிறது. இதை எதிர்ப்பவர்களுக்கு மிகக் கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன.

களப்பிரர்கள், காலக்கேயர்களையும் விஞ்சி மிக மோசமான ஆட்சியை தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் அன்பழகனும், அவரது குடும்பத்தினரும் நடத்தி வருகின்றனர் என்பது தான் மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதற்கு அதிகார வர்க்கமும் துணை போகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் அனைத்து வகையான வளர்ச்சிக் குறியீடுகளிலும், சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதிலும் அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய முதலமைச்சரோ, ‘‘யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்; எனது வழியில் குறுக்கிடாமல் இருந்தால் சரி தான்’’ என்பது போன்ற சந்தர்ப்பவாத அணுகுமுறையைக் கடைபிடித்து வருகிறார். எனவே, இந்த விஷயத்தில் ஆளுனர் தலையிட்டு தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகனும் அவரது குடும்பத்தினரும் நடத்தி வரும் டெண்டர் ராஜ்யம் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். மாநில அரசு அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்பதால், தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஒப்பந்த ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.  

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com