குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தல்

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.
குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தல்

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார். ஊரகப் பகுதிகளில் உள்ள முழுமையான மருத்துவ வசதிகள் கிடைக்கும் நோக்கில் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேலும் மேம்படுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 சென்னை கிண்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
 குழந்தைகள் இறப்பைத் தடுக்க வேண்டும்: ஒரு நாட்டின் ஆட்சி நிர்வாகத்துக்கு மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதிலும், விரிவுபடுத்துவதிலும் அதிமுக்கிய பங்கு உள்ளது.
 அதிலும், குறிப்பாக குழந்தைகள் நலனைப் பேணிக் காப்பது இன்றியமையாத ஒன்று. இந்தியா போன்ற வளர்ந்து வரும் தேசங்களின் எதிர்காலங்களாக விளங்கும் குழந்தைகளை ஆரோக்கியமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமக்களுக்கும் உண்டு.
 நாட்டில் ஆண்டுதோறும் 2.4 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் விகிதம் 13 சதவீதமாக உள்ளது. ஆனால், அவர்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருக்கின்றனரா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
 நடுத்தர குடும்பங்கள் அதிகம் உள்ள நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைப்பதில்லை; உரிய பாதுகாப்பும் கிடைப்பதில்லை என்று யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
 கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு 2.61 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் இறந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 அந்த இரு நோய்களுமே எளிதில் தடுக்கக் கூடிய ஒன்றுதான். இருப்பினும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
 இத்தகைய இறப்புகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நான் அறிவேன். ஆனாலும், இந்த விவகாரத்தில் கூடுதல் முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.
 பேறுகால மரணங்களைக் குறைப்பதில் இந்தியா மேம்பட்டு வருகிறது என்றாலும்கூட ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை நாம் எட்ட வேண்டுமானால், விரிவான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம்.
 இந்தியாவில் 60 சதவீத மக்கள் வேளாண் தொழிலைச் சார்ந்து உள்ளனர். அவர்கள் அனைவருமே கிராமப் புறங்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர ஊரகப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துவதும், தரப்படுத்துவதும் அவசியம்.
 கிராமங்களில் சேவையாற்ற மருத்துவர்கள் முன்வர வேண்டும்: இளநிலை அல்லது முதுநிலை மருத்துவம் பயின்றவர்கள் குறிப்பிட்ட காலம் கிராமங்களில் மருத்துவ சேவையாற்றுவதை கட்டாயமாக்க வேண்டும்.
 தனியார் மருத்துவமனைகள் நகரங்களில் மட்டுமே மருத்துவ வசதிகளை விரிவுபடுத்தாமல், கிராமங்களுக்கும் அதைக் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவருக்கும் மருத்துவ சேவைகள் கிடைப்பது மட்டும் முக்கியமல்ல; அனைவருக்கும் ஏற்ற வகையிலான கட்டணத்தில் தரமான சிகிச்சை கிடைப்பதும் முக்கியம்.
 அதை உணர்ந்து தனியார் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.
 இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், மக்களவை உறுப்பினர் ஜெயவர்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com