மேக்கேதாட்டு அணையால் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு

கர்நாடக மாநிலம், மேக்கேதாட்டுவில் அணைக் கட்டப்பட்டால் தமிழகத்துக்குச் சாகுபடிக்கு மட்டுமல்லாமல், குடிநீருக்கும் பேராபத்து ஏற்படும் அச்சம் மேலோங்கி வருகிறது.
மேக்கேதாட்டு அணையால் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு

தஞ்சாவூர்: கர்நாடக மாநிலம், மேக்கேதாட்டுவில் அணைக் கட்டப்பட்டால் தமிழகத்துக்குச் சாகுபடிக்கு மட்டுமல்லாமல், குடிநீருக்கும் பேராபத்து ஏற்படும் அச்சம் மேலோங்கி வருகிறது.

 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்தின் பங்கு 177.25 டி.எம்.சி. என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவு என தமிழகம் கூறி வரும்நிலையில், இப்போது இதுவும் கிடைக்குமா என்ற சந்தேகம் வலுவடைந்து வருகிறது. கடந்த காலங்களில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி தண்ணீர் கிடைக்காததே இதற்குக் காரணம்.

 நிகழாண்டில் இதுவரை 386 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்தது. ஆனால், கர்நாடகத்தில் நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை அபரிமிதமாகப் பெய்ததால், அங்கு தேக்கி வைக்க முடியாமல் திறந்து விடப்பட்டதன் காரணமாக, இந்த அளவுக்குத் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கப் பெற்றது.

 ஆனால், இதுபோன்ற உபரி நீர் மிக அரிதாக சில ஆண்டுகளில்தான் கிடைக்கிறது. குறிப்பாக, 2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு 2005-06 ஆம் ஆண்டில் 405 டி.எம்.சி.-யும், 2007-08 ஆம் ஆண்டில் 344.72 டி.எம்.சி.-யும் தண்ணீர் கிடைத்தது. மேலும், 7 ஆண்டுகளில் 200 முதல் 250 டி.எம்.சி.க்குள்ளும், மற்ற ஆண்டுகளில் 200 டி.எம்.சி.-க்குள்ளும்தான் கிடைக்கப் பெற்றது. இதில், 5 ஆண்டுகளில் 100 டி.எம்.சி-க்கு உள்ளாகவே தண்ணீர் வந்தது.

 ஆனால், 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு நீர்வரத்து குறைந்து விட்டதால், தொடர்ந்து 7 ஆண்டுகளாகக் குறுவை சாகுபடிக்கு உரிய காலமான ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க முடியாத நிலைமையிருந்தது. இதனால், காலம் கடந்து திறந்துவிடப்பட்டு ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே செய்யப்படுகிறது. ஆனால், அந்த ஒருபோக சம்பாநெல் சாகுபடிக்கும் தண்ணீர் பற்றாக்குறையால் பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்திக்கின்றனர்.

 டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, கோடை ஆகிய பருவங்களுக்கு 260 முதல் 280 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை கைக்கொடுத்து, நேரடி நெல் விதைப்பு முறை அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டாலும்கூட, ஏறத்தாழ 250 டி.எம்.சி. தண்ணீர் அவசியம் வேண்டும். மேலும், ஜன. 28-ஆம் தேதியுடன் மேட்டூர் அணையை மூடும்போது, அணையில் குறைந்தது 50 டி.எம்.சி. தண்ணீராவது இருப்பு வைக்கப்பட வேண்டும்.

 இந்நிலையில், உபரி நீரையும் தேக்கி வைப்பதற்காக மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட கர்நாடக அரசு நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. இத்திட்டத்துக்குத் தமிழகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இந்த அணையில் 66 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கி வைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

 மேக்கேதாட்டு அணைப் பாசனத்துக்கு அல்லாமல், மின் உற்பத்திக்கும், குடிநீர் தேவைக்கும் மட்டுமே என கர்நாடக அரசு கூறி வருகிறது. ஆனால், மின் உற்பத்திக்கும்கூட நாள்தோறும் விநாடிக்கு 2,000 முதல் 3,000 கன அடி வீதம் தண்ணீர் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த அளவுத் தண்ணீர் கோடைகாலத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

 ஆண்டுதோறும் ஜன. 28-ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்ட பிறகு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகத்துக்குக் கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால், இந்த அளவுக்குத் தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய சொற்ப அளவுத் தண்ணீரும் பெற வாய்ப்பில்லாமல் போய்விடும்.

 கர்நாடகத்தில் அபரிமிதமான அளவுக்கு மழை பெய்வதன் மூலம் கிடைக்கும் உபரிநீர் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நிகழ்கிறது. இந்நிலையில், புதிய அணைக் கட்டப்பட்டால், ஆண்டுதோறும் தமிழகத்துக்குரிய 177.25 டி.எம்.சி. தண்ணீர் கிடைப்பதும் அரிதாகிவிடும்.

 எனவே, மேக்கேதாட்டு அணைக் கட்டப்பட்டால், டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே பாதிப்புக்கு உள்ளாகும். மேலும், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழகத்துக்குக் கிடைக்காது என்ற அச்சமும் விவசாயிகளிடையே மேலோங்கி வருகிறது.

விகிதாசார முறை தேவை

 மூத்த வேளாண் வல்லுநர் பி. கலைவாணன் தெரிவித்தது:
 பற்றாக்குறை காலத்தில் விகிதாசார அடிப்படையில் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என நடுவர் மன்றம் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.

 ஆனால், கர்நாடகத்தில் உபரி நீர் கிடைக்கும்போது, அதைப் பங்கிட்டுக் கொள்ள வழிகாட்டுதலில் குறிப்பிடப்படவில்லை. எனவே, கர்நாடக அரசு உபரி நீர் கிடைத்தாலும்கூட, தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி.க்குள் தண்ணீர் வழங்க மட்டுமே கர்நாடக அரசு முனைப்புக் காட்டுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். உபரி நீர் வரும்போது மழை அளவைக் கணக்கிட்டு, அதன் விகித அடிப்படையில் தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். அதற்கு காவிரியில் உள்ள அனைத்து அணைகளையும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றார் கலைவாணன்.

 -வி.என். ராகவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com