கஜா புயல் பாதித்த பகுதிகளை சீரமைத்து கட்டமைக்க தனித் திட்டம்: 2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம்

கஜா புயல் பாதித்த பகுதிகளை சீரமைத்து கட்டமைக்க தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டங்களைச் செயல்படுத்தவுள்ள அந்தப் பிரிவுக்கு,
கஜா புயல் பாதித்த பகுதிகளை சீரமைத்து கட்டமைக்க தனித் திட்டம்: 2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம்


கஜா புயல் பாதித்த பகுதிகளை சீரமைத்து கட்டமைக்க தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டங்களைச் செயல்படுத்தவுள்ள அந்தப் பிரிவுக்கு, கஜா புயல் மறுகட்டுமானம், மறுசீரமைப்பு மற்றும் பேரிடரில் இருந்து மீளுதல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுக்கென தனியாக 2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு:
கஜா புயல் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளான நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையே கடந்த 16-ஆம் தேதி கரையைக் கடந்தது. இதனால், ஆயிரக்கணக்கான குடிசைகளும், வீடுகளும் கடுமையாகச் சேதம் அடைந்தன. வேளாண்மை மற்றும் தோட்டப் பயிர்களை விவசாயிகள் இழந்துள்ளனர். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், 
நாகப்பட்டினம் தாலுகாக்களில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததுடன், மீன்பிடி படகுகளும் கடுமையான சேதத்துக்கு ஆளாகி தவிக்கின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வீடுகளை மறுகட்டுமானம் செய்யவும், பாதித்த இதர உள்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்திடவும், வேளாண்மை, தோட்டப் பயிர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், கஜா புயல் மறுகட்டுமானம் மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கடிதத்தை வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் தமிழக அரசிடம் அளித்திருந்தார்.
அதன்படி, கஜா புயல் மறுகட்டுமானம், மறுசீரமைப்பு மற்றும் பேரிடரில் இருந்து மீளுதல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
யார், யார் நியமனம்?: கஜா புயல் மறுகட்டுமானம், மறுசீரமைப்பு மற்றும் பேரிடரில் இருந்து மீளுதல் திட்டத்தின் இயக்குநராக டி.ஜெகந்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
மேலும், நாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு கஜா புயல் மறுகட்டுமானம், மறுசீரமைப்பு மற்றும் பேரிடரில் இருந்து மீளுதல் திட்டத்தின் கூடுதல் திட்ட இயக்குநராக எம்.பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கும்பகோணம் சார் ஆட்சியராக தற்போது பணியாற்றி வருகிறார் எனஅந்த உத்தரவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
சுனாமிக்குப் பிறகு... தமிழகத்தை கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி எனும் ஆழிப்பேரலை கடுமையாகத் தாக்கியது. 
இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தனித்திட்டம் வகுக்கப்பட்டு அதற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். சுனாமிக்குப் பிறகு, இப்போது கஜா புயலுக்கு இதுபோன்ற தனித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தனித் திட்டம் வகுக்கப்பட்டால் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐக்கிய நாடுகள், காமன்வெல்த் முகமைகள் போன்றவற்றிடம் இருந்து அதிகளவு நிதியைப் பெற முடியும். இந்த நிதிகளைக் கொண்டு உள்கட்டமைப்புப் பணிகள், சாலை, குடிநீர் வசதித் திட்டங்களை அதிகளவு மேற்கொள்ள முடியும். சுனாமிக்குப் பிறகு என்னென்ன திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதோ அதுபோன்ற பணிகளை கஜா புயலுக்குப் பிறகும் மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே தனித் திட்டம் உருவாக்கப்பட்டு அதற்கு இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com