சுடச்சுட

  

  குன்னூர்-உதகை இடையே ரயில் பஸ் சேவை: சோதனை ஓட்டம் நடைபெற்றது

  By DIN  |   Published on : 06th December 2018 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rail-bus

  குன்னூர்-உதகை இடையே இயக்கப்படவுள்ள ரயில் பஸ்.


  நீலகிரி மாவட்டம், குன்னூர்-உதகை இடையே சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க ரயில் பஸ் தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
  மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு தினமும் 4 பெட்டிகளுடன் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. குன்னூர் வரை பல்சக்கரம் பொருத்திய தண்டவாளத்தில் மலை ரயில் சென்று வருகிறது. இதில் பயணம் செய்ய தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர். 
  இந்நிலையில், மலை ரயில் சேவையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
  இந்நிலையில், குன்னூர்- உதகை இடையே ரயில் பஸ் சேவையை இயக்க சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
  1998-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 60 இருக்கைகள் கொண்ட இந்த ரயில் பஸ் 180 லிட்டர் டீசல் கொள்ளளவில் இயங்கக் கூடியது. முன்னும் பின்னும் 2 ஓட்டுநர்களால் இயங்கும் வகையில் இது அமைந்துள்ளது. 
  மேற்கு ரயில்வே துறையில் குஜராத் மாநிலத்தில் இயங்கி வந்த ரயில் பஸ் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் -கல்லாறு இடையே ரயில் பஸ் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
  இதில் சேலம் ரயில்வே முதன்மை மண்டல பொறியாளர்கள் முகுந்தன், அரவிந்தன், பொறியாளர் முகமதுஅஷ்ரப், குன்னூர் ரயில் நிலைய மேலாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். 
  இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்தால் ரயில் பஸ் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு புதிய தொழில்நுட்பத்தில் புனரமைக்கப்பட்டபின் குன்னூர்- உதகை இடையே ரயில் பஸ் சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai