மேக்கேதாட்டு கண்டனத் தீர்மானம் மீது உடனடி நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம் 

மேக்கேதாட்டு அணையை எதிர்த்து தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார
மேக்கேதாட்டு கண்டனத் தீர்மானம் மீது உடனடி நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம் 


மேக்கேதாட்டு அணையை எதிர்த்து தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக, அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 

"காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக விரிவான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அப்பட்டமாக அவமதிக்கும் செயலாகும். 

இதுதொடர்பான தகவல்களை ஏற்கனவே, 27.11.18 ஆம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். மேலும், அதில் கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப்பெற மத்திய நீர் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். 

காவிரியின் குறுக்கே அணை கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும், அதற்கான விரிவான விரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்குவதும் தமிழகத்தில் மிகுந்த வேதனையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் மறுக்கப்படும். 

அதனால், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்தும், அதற்கான விரிவான விரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியதை கண்டித்தும் தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசு, மத்திய நீர் ஆணையம் வழங்கியுள்ள அனுமதியை திரும்பப் பெற உத்தரவிடவேண்டும் என்பதையும் தமிழக சட்டப்பேரவை வலியுறுத்தியுள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில், தமிழகத்தின் அனுமதி பெறாமல் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே எந்தவொரு இடத்திலும் அணை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை கர்நாடக அரசோ அல்லது அது சார்ந்த அமைப்புகள் மேற்கொள்ளக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது. 

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்ட தீர்மானத்தின் வடிவத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன். இந்த தீர்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com