சுடச்சுட

  
  rail-bus

  நீலகிரி மலை ரயில் பாதையில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்ட ரயில் பஸ். 


  நீலகிரி மாவட்டம், குன்னூர்- உதகை இடையே இயக்குவதற்கான ரயில் பஸ் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக ரயில்வே அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.


  சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் குன்னூர்- உதகை இடையே ரயில் பஸ் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்தது. இதற்காக குஜராத் மாநிலத்திலிருந்து பழைய ரயில் பஸ் மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு வரப்பட்டது. 

  பின்னர் மேட்டுப்பாளையத்திலிருந்து கல்லாறு வரை இந்த ரயில் பஸ் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

  இதைத் தொடர்ந்து, இரண்டாம்கட்ட சோதனை ஓட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு ரயில் பஸ் வியாழக்கிழமை இயக்கப்பட்டது. 

  சுமார் 32 கிலோ மீட்டர் மலை ரயில் பாதையில் பயணித்து 13 குகைகளுக்குள் புகுந்து எந்தவிதமான இடையூறும் இல்லாமல் ரயில் பஸ் வருவதை அதிகாரிகள் உறுதிசெய்தனர். 

  மேலும் குன்னூரில் இருந்து உதகைக்கு செல்லும் மலைப் பாதையில் ரயில் பஸ் எந்தவிதப் பிரச்னையும் ஏற்படாமல் சென்று அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ரயில் பஸ் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இந்த ரயில் பஸ் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. 

  அங்கு புதிய இருக்கைகள் மற்றும் இயந்திரம் ஆகியவை பொருத்தப்பட்டு உதகை, குன்னூர் இடையே இந்த ரயில் பஸ் இயக்கப்பட உள்ளது என்றனர்.

  இந்த சோதனை ஓட்டத்தின்போது தெற்கு ரயில்வே பொறியியல் பிரிவு மூத்த அதிகாரி ரீட்டா சௌத்ரி உடன் பயணித்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai