கஜா புயலில் திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன: முதன்மைச் செயலாளர்

திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொண்ட முதற்கட்ட கணக்கெடுப்பின்படி, கஜா புயலில் 5 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்திருப்பது தெரியவந்துள்ளது என சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத்துறை முதன்மைச் செயலாளர் கே. மணிவாச
கஜா புயலில் திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன: முதன்மைச் செயலாளர்

திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொண்ட முதற்கட்ட கணக்கெடுப்பின்படி, கஜா புயலில் 5 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்திருப்பது தெரியவந்துள்ளது என சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத்துறை முதன்மைச் செயலாளர் கே. மணிவாசகம் தெரிவித்துள்ளார்.  

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணிப்பதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி மணிவாசகம், கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முதலில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் என கணக்கெடுக்கப்பட்டு, புயல் நிவாரணம் வழங்கப்படும். அடுத்தகட்டமாக மாடிவீடுகளை அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் கணக்கெடுத்து ஆய்வறிக்கை வழங்கிய பிறகு சேதத்துக்குத் தகுந்தபடி நிவாரணம் வழங்கப்படும். 

பயிர்ச்சேதம் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. வேளாண்துறையின் முதற்கட்ட கணெக்கெடுப்பின்படி, திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன என்றார் அவர். பள்ளியில் ஆய்வு: இதைத்தொடர்ந்து, கஜா புயலால் மேற்கூரை சேதமடைந்த கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட மேல திருமதிக்குன்னம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியையும், அதன் அருகில் இடியும் தருவாயில் உள்ள கட்டடத்தையும் பார்வையிட்ட முதன்மைச் செயலாளர், சத்துணவு கூடத்துக்குள் சென்று, மாணவர்களின் வருகை பதிவேட்டையும், பார்வையாளர் பதிவேட்டையும் ஆய்வுசெய்தார். 

இதையடுத்து, அப்பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களிடம் இடைத்தரகர்களின் குறுக்கீடு ஏதும் உள்ளதா? எனக் கேட்டறிந்தார். ஆய்வின்போது, வட்டாட்சியர் செல்வி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர்கள் ஜி. கிருஷ்ணகுமார், சரவணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் காகரின், தலைமையாசிரியர் சுரேஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com