கூரை, தொகுப்பு வீடுகளை சீரமைக்க தன்னார்வலர்களின் உதவியை எதிர்பார்க்கும் கிராமத்தினர்!

வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கஜா புயலின் சீற்றத்தால் சேதமடைந்த கூரை, தொகுப்பு வீடுகளின் இடிபாடுகளை அகற்றிவிட்டு, தற்காலிகமாக சீரமைக்க
காடந்தேத்தி ஊராட்சி, காலனித் தெருவில் இடிபாடுகள் அகற்றப்படாமல் காணப்படும் தொகுப்பு வீடுகள்.
காடந்தேத்தி ஊராட்சி, காலனித் தெருவில் இடிபாடுகள் அகற்றப்படாமல் காணப்படும் தொகுப்பு வீடுகள்.


வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கஜா புயலின் சீற்றத்தால் சேதமடைந்த கூரை, தொகுப்பு வீடுகளின் இடிபாடுகளை அகற்றிவிட்டு, தற்காலிகமாக சீரமைக்க தன்னார்வலர்களின் உதவியை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கஜா புயலால் பாதிப்புக்குள்ளான நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், பின்தங்கிய கிராமங்களில் அரசின் நிவாரண உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதேவேளையில், தன்னார்வலர்கள் அளிக்கும் நிவாரண உதவிகளும், கடைமடைக்கு வரும் பாசன நீரைப் போல் எட்டாக்கனியாகவே உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பல கிராமங்களில், ஏழை எளிய குடும்பத்தினர் தங்களது குடியிருப்புகளை சீரமைக்க முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு பன்னத்தெரு, காடந்தேத்தி ஊராட்சிகளில் உள்ள சில கிராமங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். 
காடந்தேத்தி: இந்த ஊராட்சியில் அமைந்துள்ள காலனித் தெருவில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுமார் 60 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு 1986-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் ரூ. 5 ஆயிரம் மதிப்பீட்டில், மண் சாந்தால் 30 ஓட்டு வீடுகளும், அதன்பின்னர் 1995-ஆம் ஆண்டில் 20 வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது, மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் இந்த வீடுகளில் பொதுமக்கள் வேறுவழியின்றி குடியிருக்கின்றனர். 
அண்மையில் வீசிய கஜா புயலின்போது, அருகில் பாதுகாப்பான இடங்கள் எதுவும் இல்லாத நிலையில், அரசின் உதவியோடு கட்டப்பட்டுள்ள 2 வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்து உயிர்தப்பியதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். புயலால் வீடு, உடைமைகளை இழந்த இவர்கள், வீடுகளை சீரமைக்க இயலாமல், முகாமிலேயே தங்கியுள்ளனர். 
பன்னத்தெரு ஊராட்சி: மாராச்சேரி, கூத்தங்குடி, நாகமங்களம், அகரமாராச்சேரி, பண்ணைத்தெரு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பன்னத்தெரு ஊராட்சியில், 900 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களின் நிலையும் இதே போலத்தான் பரிதாபகரமான நிலையில் உள்ளது.
கூத்தங்குடி கிராமத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட பிரிவினர், தியாகராஜ முதலியார் பண்ணைக்குச் சொந்தமான நிலத்தில் வசிக்கின்றனர். பல ஆண்டுகளாக போராடியும், குடிமனைப்பட்டா கிடைக்காததால், அரசு வீடுகள் இவர்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை. அத்துடன், கூரை வீடுகளில் வசித்து வந்த இவர்களுக்கு, இன்றுவரை தார்ப்பாய்கள் கூட கிடைக்கவில்லை என்பது வேதனையின் உச்சகட்டம். 
இடிந்த மண்சுவர்கள், கீற்றுகளை அகற்றிவிட்டு, புதிய கூரைகளை வேய்வதற்கு யாரேனும் உதவ முன்வரமாட்டார்களா? என கூத்தங்குடி மக்கள் எதிர்பார்க்கின்றனர். 
வெளிமாவட்ட தன்னார்வலர்களிடம் கீற்று, ஓடுகளைப் பெற்று நகராட்சியில் உள்ள மக்களுக்கு அளிப்பதைப்போல, கிராமப்புற மக்களுக்கும் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவர்கள் வலியுறுத்துகின்றனர். நிரந்தர குடியிருப்புகள் வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்தாலும், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, கூரைகள், தொகுப்பு வீடுகளின் இடிபாடுகளை அகற்றிவிட்டு, தற்காலிகமாகக் குடியிருப்புகளை சீரமைத்துக் கொடுப்பதற்காவது அரசோ, தன்னார்வலர்களோ முன்வர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com