அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் கிடைக்க வேண்டும்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வலியுறுத்தினார்.
அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் கிடைக்க வேண்டும்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வலியுறுத்தினார்.
 திருவாரூரில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
 ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம், கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் அழிந்து விட்டது. மக்கள் வீடுகளை இழந்திருக்கின்றனர். மரங்களெல்லாம் விழுந்து விட்டன. அரசால் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை. அரசின் அறிவிப்புகள் கம்பீரமாக இருந்தன. ஆனால், தற்போது பயனாளிகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தலைஞாயிறு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடக்குமுறைகள் மக்கள் மீது ஏவப்படுகின்றன. நாங்கள் போகும்போது கூட மக்கள் எங்களை வழிமறித்து, கேட்கின்றனர். நாங்கள் அந்த மக்களை சமாதானப்படுத்தி விட்டு செல்கிறோம்.
 அமைச்சர் அளித்த புகாரின் பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரே இறங்கி கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பொதுமக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறவேண்டும்.
 அத்துடன் அரசு அறிவித்துள்ள நிவாரணத்தின் அளவை அதிகரித்து, பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும். சேலம் எட்டு வழிச்சாலைக்காக அப்புறப்படுத்தப்படும் தென்னை மரத்துக்கு ரூ. 50 ஆயிரம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புயல் பாதித்த மாவட்டங்களில் முறிந்த மரத்துக்கு ரூ.600 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல.
 புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து, அவைகளுக்கென சிறப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும். மத்திய அரசிடம் தமிழக அரசு நல்ல இணக்கத்துடன் உள்ளதால் தமிழக அரசு கேட்ட ரூ. 15ஆயிரம் கோடியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மக்கள் நலனுக்காக திமுகவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. இந்த கூட்டணி தேர்தல் கூட்டணிதான் என்றார் இரா. முத்தரசன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com