நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு; புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுவை நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விரைவில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு; புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுவை நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விரைவில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
 இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
 மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது. காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், காவிரி பாயும் எந்தப் பகுதியிலும் தடுப்பணை கட்டக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதையும் மீறி கர்நாடக அரசும், மத்திய அரசும் செயல்படுகின்றன. இதுதொடர்பாக புதுவை அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்து வாரம் விசாரணைக்கு வருகிறது. இதேபோல, தமிழக அரசும் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
 மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக வருகிற 14-ஆம் தேதி புதுவை சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவுப்படி, சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசு அணை கட்டுவதைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம். மத்திய அரசும், கர்நாடக அரசும் காவிரி நதிநீர் பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பது மட்டுமல்லாமல், மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
 புதுவை அரசு சார்பில், காரைக்காலில் கஜா புயல் சேத மதிப்பைக் கணக்கிட்டு, ரூ. 1,342 கோடியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம். ஆனால், இதுவரை இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு எந்த நிதியையும் வழங்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தையும், காரைக்காலையும் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்ப்பதைத் தவிர்த்து வருகிறார். தென் மாநில மக்கள் பாதிக்கப்படும் போது, அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
 நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக க.லட்சுமிநாராயணன் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மத்திய அரசின் நியமனம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் கலந்து பேசி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது. ஆனால், மத்திய அரசு நியமித்த உறுப்பினர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதை விமர்சனம் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. இந்தத் தீர்ப்பில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளன.
 குறிப்பாக, ஒருவர் தேர்தலில் நிற்கும் போது, அவரது குற்றப் பின்னணி, சொத்து, கடன் போன்ற விவரங்களை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், நியமன உறுப்பினர்கள் இதுவரை அவ்வாறு எந்த விவரங்களையும் தாக்கல் செய்யவில்லை. இந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்திருக்க வேண்டும். அப்படி அளிக்கவில்லை என்றால், அவர்கள் எம்எல்ஏக்களாகக் கருதப்படமாட்டார்கள். இது மிகப்பெரிய சட்டச் சிக்கல். உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நிறைய ஓட்டைகள் உள்ளன என்றார் முதல்வர் நாராயணசாமி.
 பேட்டியின் போது, புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமிநாராயணன் உடனிருந்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com