ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா?: தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் 

கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா? என்று தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 
ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா?: தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் 

சென்னை: கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா? என்று தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணைக் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்கான அடிப்படைப் பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்கள் நலன் சார்ந்த இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் காவிரி உபரி நீர் பெரும்பாலும் வீணாக கடலில் கலக்கிறது. கொள்ளிடம் ஆற்று நீரைக் கொண்டு தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களை வளம் கொழிக்கும் பூமியாக மாற்ற முடியும். அதற்காகத் தான் 110 கி.மீ பாயும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 5 கி.மீ இடைவெளியில் ஒரு தடுப்பணை வீதம் 20 தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

இதைத் தொடர்ந்து நாகை மாவட்டம், குமாரமங்கலத்திற்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையில், கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கும் வகையில், 400 கோடி ரூபாயில் கதவணையுடன்கூடிய தடுப்பணை கட்டப்படும் என 04.07.2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

ஆனால், அதன்பின் 4 ஆண்டுகளாகியும் இதுவரை அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்த அடிப்படைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தடுப்பணைத் திட்டத்தை அறிவித்த ஜெயலலிதா அதன் பின் இரு ஆண்டுகள் பதவியில் நீடித்தாலும், தமது அறிவிப்பை செயல்படுத்துவதற்காக சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை. அவருக்குப் பிறகு பதவிக்கு வந்தவர்கள் தடுப்பணை கட்டுவதற்கான அரசாணையை வெளியிட்டார்களே தவிர, இதுவரை தடுப்பணைக் கட்டுவதற்கான நிலங்களைக் கூட கையகப்படுத்தவில்லை. அதனால் தடுப்பணைக்கான திட்ட மதிப்பு ரூ.600 கோடியாக அதிகரித்து விட்டது.

கொள்ளிடம் தடுப்பணைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி கொள்ளிடம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான உழவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று கொள்ளிடத்தில் தடுப்பணைத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும்படி வலியுறுத்தினர். 

 அதேபோல், கொள்ளிடம் கடலில் கலக்கும் முகத்துவாரம் வழியாக கடல் நீர் கொள்ளிடம் ஆற்றுக்குள் நுழைவதைத் தடுக்க முகத்துவாரம் அமைந்துள்ள அளக்குடியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உழவர்களைத் திரட்டி பா.ம.க. பல போராட்டங்களை நடத்தியது. ஆனால், அவற்றுக்கு பயனில்லை.

தமிழக அரசின் இந்த அலட்சியம் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளிடம் தடுப்பணைத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500 கொள்முதல் விலை வழங்க வேண்டும்; 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்; 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளில் நிலுவையில் உள்ள பயிர்க்காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்குடி, சிதம்பரம் வட்டங்களில் கடைமடை பாசனப் பகுதிகளுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்களை நடத்தப்போவதாக கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகளின் இந்தக் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. இவற்றில் பெரும்பாலான கோரிக்கைகள் அப்பகுதி விவசாயிகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளுக்கும் பொருந்தக் கூடியவை. எனவே, இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் வரும் 20-ஆம் தேதி நடத்தும் சாலை மறியல் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழுமையான ஆதரவை வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com