அரசியல் சுழலில் மேக்கேதாட்டு அணை!

அருகருகே அமைந்திருக்கும் கர்நாடகமும் தமிழகமும் எல்லைகளைப் பகிர்ந்துகொண்டிருந்தாலும்,  காவிரி ஆற்றுநீரைப் பகிர்ந்துகொள்வதில் நீண்ட காலமாகவே கசப்புணர்வை எதிர்கொண்டுள்ளன.  
அரசியல் சுழலில் மேக்கேதாட்டு அணை!

அருகருகே அமைந்திருக்கும் கர்நாடகமும் தமிழகமும் எல்லைகளைப் பகிர்ந்துகொண்டிருந்தாலும்,  காவிரி ஆற்றுநீரைப் பகிர்ந்துகொள்வதில் நீண்ட காலமாகவே கசப்புணர்வை எதிர்கொண்டுள்ளன.  

இரு மாநிலங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை பலனளிக்காததால்,  காவிரி நடுவர் மன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடந்தது. பின்னர்,  உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு பிறகு, 150 ஆண்டு காலமாக நிலவி வந்த காவிரிப் பிரச்னை ஓய்ந்து,  இரு மாநில மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர். இந்த நிலையில்,  அதற்கு உலை வைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதாக கர்நாடகம்  அறிவித்துள்ள தகவல்,  இரு மாநிலங்களுக்கும் இடையே  'காவிரி பதற்றம் '  மீண்டும் படபடப்பை ஏற்படுத்தியுள்ளது.  காவிரி ஆறு, கர்நாடகத்தைக் கடந்து, தமிழகத்தில் நுழையும் மேக்கேதாட்டு என்ற மலைப்பகுதியில் இந்த அணை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால்,  தமிழக அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல்,  விவசாயிகளும் மேக்கேதாட்டு தகிப்பில் 
கொதித்துப் போயுள்ளனர் என்றே கூறலாம்..

மேக்கேதாட்டு அணை ஏன்? 

காவிரி நடுவர்மன்றத்தில் 465 டி.எம்.சி. தண்ணீரை ஒதுக்கும்படி கேட்டிருந்த கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி. வழங்கப்பட்டிருந்தது.  சாதாரண ஆண்டுகளில் கர்நாடகத்தில் 450 டி.எம்.சி. தண்ணீர் காவிரி ஆற்றில் கிடைக்கிறது.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீரை அளித்துவிட்டால்,  எஞ்சியுள்ள 272.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 2018-ஆம் ஆண்டில் நடந்ததுபோல, கர்நாடகத்தில் பெருவெள்ளம் ஏற்படும்போது கூடுதலாக 200 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கிறது.  இத் தண்ணீரைச் சேகரித்து வைக்க அணைகள் இல்லை என கர்நாடகம் கூறிவருகிறது.   இதனால், 177.25 டி.எம்.சி. தண்ணீர் போக கூடுதலாகக் கிடைக்கும் 200 டி.எம்.சி. தண்ணீரை உபரியாக தமிழகத்திற்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளதாக  கர்நாடகம்  குறைபட்டுக் கொள்கிறது.. இந்தத் தண்ணீரை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள கர்நாடகம் விரும்பியது.  இதன்  வெளிப்பாடுதான்,  ராமநகரம் மாவட்டம், கனகபுரா வட்டத்தின் மேக்கேதாட்டு பகுதியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் அணை கட்டுவதென 1980-களில் கர்நாடகம் தீர்மானித்தது.  இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

இந் நிலையில், திட்ட மதிப்பீட்டை ஈடுசெய்ய முடியாத நிலையில்,  அத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.  காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு 2007-ஆம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரைத் தவிர, கூடுதலாகக் கிடைக்கும் உபரி நீரைப் பயன்படுத்திக் கொள்வதற்கு சட்டத் தடை எதுவுமில்லாததை உணர்ந்த கர்நாடகம்,  மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை மீண்டும் யோசிக்கத் தொடங்கியது. 

2013-ஆம் ஆண்டு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்ததும், மேக்கேதாட்டு அணை திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அடிப்படை வேலைகளில் இறங்கியது.  இந்த திட்டத்துக்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இவற்றை பொருட்படுத்தாத கர்நாடக அரசு, சாத்தியக்கூறு அறிக்கையைத் தயார் செய்து மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததுடன், 2017, பிப்ரவரியில் அமைச்சரவையில் கொள்கைரீதியான ஒப்புதலையும் கர்நாடக அரசு பெற்றது.  ரூ.5,912 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள மேக்கேதாட்டு அணைத் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள மத்திய நீர் ஆணையம், விரிவான வரைவுத் திட்ட அறிக்கையை (டிபிஆர்) தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது.  இதன்காரணமாக, மேக்கேதாட்டு அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனிடையே,  மேக்கேதாட்டு அணையின் வரைவுத் திட்ட அறிக்கையைத் தயாரிக்க  காவிரி நீர் ஆணையத்தின் அனுமதிக்கு  இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.  இந்த நிலையில், மேக்கேதாட்டு அணையின் விரிவான வரைவு திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு தற்போது மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளது.

உண்மையான காரணம்

கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு காவிரி ஆற்று நீரில் காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கீடு செய்துள்ள தண்ணீர் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.  அப்படியானால், 15 ஆண்டுகளுக்கு பிறகு நீர்ப் பங்கீட்டு அளவை மறுபரிசீலனை செய்யும் போது குடிநீர் வரம்பைப் பெருக்கிக் கொள்வதோடு,  நீர்ப்பாசனப் பரப்பையும் விரிவாக்கிக் கொண்டால், நீர்ப்பங்கீடு உயரும் என்று கர்நாடக அரசு கணக்குப் போடுகிறது. மேக்கேதாட்டு அணை குடிநீர், மின்சார உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு கூறினாலும்,  அதன் உள்நோக்கம் ராமநகரம், பெங்களூரு ஊரகம், கோலார் ஆகிய மாவட்டங்களில் நீர்ப் பாசனத்திற்குப் பயன்படுத்துவதே மறைமுகத் திட்டமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.  புதிதாக நீர்ப் பாசன திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு காவிரி நடுவர் மன்றம் அனுமதி மறுத்துள்ளதைத் தொடர்ந்து,  குடிநீர், மின் உற்பத்தி என்ற காரணங்களைக் கூறி சட்டத்தை வளைத்து,  மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கர்நாடக அரசு கருதுகிறது.

வனப் பகுதியில் மேக்கேதாட்டு உள்ளதால்,   விவசாயத்துக்கு காவிரி நீரைப் பயன்படுத்த வாய்ப்பே இல்லை.  மேலும், மேக்கேதாட்டுவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அணையில் இருந்து 4 கி.மீ. தொலைவில்தான்  தமிழகம் அமைந்துள்ளது.  இதனால், நீர்ப் பாசனத்திற்கு வாய்ப்பே இல்லை என்று கர்நாடக அரசு அடித்துக் கூறுகிறது.  ஆனால், விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதே கர்நாடக அரசின் நீண்டகாலத் திட்டமாகும். கிருஷ்ணராஜ சாகர் அணை (45.05 டி.எம்.சி.), ஹேமாவதி அணை (35.76 டி.எம்.சி.), கபினி அணை (19.52 டி.எம்.சி.), ஹாரங்கி அணை (8.07 டி.எம்.சி.) ஆகியவற்றின்  மொத்தக் கொள்ளளவு 108.40 டி.எம்.சி.யாக இருக்கும் நிலையில், 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேக்கேதாட்டு அணையைக் கட்ட உத்தேசிப்பது ஏன்?  என்ற கேள்வி எழுவது இயற்கைதான்.

தமிழகத்துக்கு உபரியாகச் செல்லும் நீரை முழுமையாக தடுத்து நிறுத்துவதோடு, பெங்களூரின் குடிநீர்த் தேவை, மின் உற்பத்திக்கு பயன்படுத்திக் கொள்வதோடு எதிர்கால நீர்ப் பாசன தேவையையும் பூர்த்தி செய்துகொள்வதே கர்நாடக அரசின் உள்நோக்கமாகும்.  1970-களில் ஹேமாவதி, ஹாரங்கி அணைகளைக் கட்டிய போது தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த எதிர்ப்பையும் மீறி அணைகளை கட்டியதால்,  தமிழகத்தில் பாய்ந்த காவிரி ஆற்றின் நீர் அளவு கணிசமாகக்  குறைந்தது என்பது வரலாறு கூறும் நிதர்சன உண்மை.  மேலும், மேக்கேதாட்டுவில் அணை கட்டினால், தமிழகத்திற்குப் போதுமான பாசனநீர் கிடைக்காது என்பதோடு, பிலிகுண்டுலு, மேட்டூர் அணைக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள காடுகள் அழிந்து, நிலத்தடிநீர் வற்றிவிடும் அபாயம் உள்ளதாக  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

பெங்களூருக்கு குடிநீர்

2018, மே 23-ஆம் தேதி கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தது. இதைத் தொடர்ந்து,  பிரதமர் மோடி, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின்கட்கரி ஆகியோரை பல முறை சந்தித்த முதல்வர் குமாரசாமி,  நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கும்படி கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.

இதற்கு காரணம் என்ன?  800 சதுர கி.மீ. பரப்பளவில் உலக அளவில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் நகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது.  தற்போது 1.25 கோடியாக இருக்கும் பெங்களூரின் மக்கள்தொகை 2030-இல் 2.11 கோடியாக (இரு மடங்கு) உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  தற்போது 20 டி.எம்.சி.யாக உள்ள பெங்களூரின் குடிநீர்த் தேவை, அப்போது 50 டி.எம்.சி.யாக உயரக்கூடும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை வேகமாக உருவெடுத்துவரும் உலக நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே இந்திய நகரம் பெங்களூரு என்று பிபிசி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.  எனவே, அதிகரித்துவரும் பெங்களூரின் குடிநீர்த்  தேவையைச் சமாளிக்கும் நோக்கில் மேக்கேதாட்டு அணை கட்ட வேண்டியதன் அவசியம் உள்ளதாக கர்நாடக அரசு தெரிவிக்கிறது.

67 டி.எம்.சி. கொள்ளளவு  கொண்ட மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால், பெங்களூரின் எதிர்காலக் குடிநீர்த் தேவையைச்  சமாளிக்க முடியும் என்று கர்நாடக அரசு கருதுகிறது.  மேலும்,  மேக்கேதாட்டு அணையில் இருந்து உடனடியாக பெங்களூருக்கு 16 டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டுவரவும் கர்நாடக அரசு திட்டம் வகுத்துள்ளது.  இது தவிர, மேக்கேதாட்டு அணையின் வாயிலாக ஆண்டுக்கு 400 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 

அரசியல் விளையாட்டு!

தெற்கு தேறுகிறது, வடக்கு வாடுகிறது என்ற குமுறல் அண்மைக்காலமாக கர்நாடகத்தில் எழுந்தவண்ணம் உள்ளது.  தென் கர்நாடகத்தைக் காட்டிலும், வடகர்நாடகம் வளர்ச்சியில் தேக்கநிலையை அடைந்திருப்பதாக அப் பகுதி மக்கள் அங்கலாய்க்கத் தொடங்கியுள்ளனர். அதனால் வட கர்நாடகத்தை தனிமாநிலமாக்க கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. தென்கர்நாடகத்தில், குறிப்பாக காவிரி ஆற்றுப்படுகையான குடகு, ஹாசன், மைசூரு, மண்டியா, பெங்களூரு ஊரகம், சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் மஜத வலிமைவாய்ந்த கட்சி. இங்குள்ள ஒக்கலிகர் சமுதாயத்தினர் பெரும்பாலும் மஜதவில் உள்ளனர்.  இம் மக்களின் வளமையைப் பெருக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் வாயிலாக அப் பகுதியில் தனது வாக்கு வங்கியை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடவும்,  அவரது மகனும் முதல்வருமான எச்.டி.குமாரசாமியும் கருதுகின்றனர்.

இதை முறியடித்து, தனது தனிப்பட்ட செல்வாக்கைப் பெருக்கிக்கொள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் திட்டமிட்டிருக்கிறார்.  முதல்வராகும் கனவில் உள்ள டி.கே.சிவக்குமாரும் ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 

அவரது சொந்தத் தொகுதியான கனகபுராவில் அணை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது மேக்கேதாட்டு அணை.  இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும் 3 ஆண்டுகளில் அணையைக் கட்டிமுடிக்க திட்டமிட்டிருக்கும் கர்நாடக அரசு, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வியூகம் அமைத்துள்ளது.
மக்களவை தேர்தலில் மேக்கேதாட்டு அணை திட்டத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த மஜதவும், காங்கிரஸூம் திட்டம் வகுத்துள்ளன. இந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்து தென் கர்நாடகத்தில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள பாஜகவும் தயாராக உள்ளது.  அதன்பொருட்டு,  மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி அளித்து,  அதை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவும் கர்நாடக பாஜக திட்டமிட்டுள்ளது.  இந்த அரசியல் சுழலில் மேக்கேதாட்டு அணை திட்டம் சிக்கியுள்ளது.  

மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதன் மூலம் காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள 5 ஆயிரம் ஹெக்டேர் காடு அழியும் அபாயம் உள்ளது.  இதற்கு கர்நாடக வனத்துறை ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  காடுகளின் பரப்பைக் குறைப்பது சுற்றுச்சூழலுக்கு சீர்செய்ய முடியாத நீண்ட காலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  மேலும்,  30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளது.  இந்தத் திட்டத்திற்கு மேக்கேதாட்டுவை சுற்றியுள்ள கிராம மக்கள் மறைமுகமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.  மேக்கேதாட்டு அணை திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக  அரசு சட்டப் போராட்டத்தை தீவிரமாக்கியுள்ளது.  மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் போன்றவற்றை கருத்தில் கொண்டுள்ள தமிழக அரசியல் கட்சிகள், இத் திட்டத்தை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்துள்ளன. சட்ட ரீதியான போராட்டத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தினால்,  மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு 'அணை' போடலாம் என்று தமிழக விவசாயிகள் நம்புகின்றனர்.

மேக்கேதாட்டு, ஏதோ ஒரு அணை திட்டம் போல கருதாமல் தமிழகத்தின் நீராதாரத்தை முடக்கும் அபாய சங்கு என்பதை கவனத்தில் வைத்து தமிழக விவசாயிகள், அரசியல் கட்சிகள்,  பொதுமக்கள் போராட்டம் நடத்தினால்,  மேக்கேதாட்டு அணை திட்டத்தை முடக்க முடியும்.

மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை கர்நாடக அரசியல் கட்சிகளும் அரசியல் ரீதியாக மட்டுமே அணுகி வருகின்றன.  இந்தத் திட்டத்திற்கு அவ்வளவு சுலபமாக அனுமதி கிடைக்காது என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.     அதுவரையில் அரசியலுக்கு துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தலாமே என்றுதான் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகியகட்சிகள் இப் பிரச்னையில் அதீத கவனம் செலுத்தி வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க மேக்கேதாட்டு அணை திட்டம் நிறைவேறினால்,  தாகம் தணிக்க போதுமான தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெங்களூரு மக்களும், திட்டம் முடங்கினால் எப்போதாவது உபரியாகக் கிடைக்கும் நீருக்கு பஞ்சமிருக்காது என்று தமிழக விவசாயிகளும் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்.  ஆனால், மேக்கேதாட்டு அணை திட்டம் மாயத் தோற்றத்தில் காட்சி அளித்து வருவதால், கர்நாடக மற்றும் தமிழக விவசாயிகள், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பதுதான் நிதர்சன உண்மையாக உள்ளது!


அணையின் அம்சங்கள்

அணையின் பெயர்: 
மேக்கேதாட்டு ஒழுங்காற்று நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டம்
தன்மை: பன்முகப் பயன்பாடு
அமைவிடம்: மண்டியா, ராமநகரம்,  சாமராஜ்நகர் 
மாவட்டங்களின் மலவள்ளி, கனகபுரா, கொள்ளேகால்.
மூழ்கும் பரப்பு: 4996 ஹெக்டேர்
ஆற்றுப்படுகை கீழ்நிலை: 352 மீ.
முழுமையான நீர்த்தேக்க நிலை: 440  மீ.
அதிகபட்ச நீர் நிலை: 441.20 மீ.
குறைந்தபட்ச நீர்வெளியேற்ற நிலை: 395 மீ.
கடைசேமிப்புநிலை(டெட் ஸ்டோரேஜ்): 370.48 மீ.
மொத்த நீர் சேகரிப்பு அளவு:  66.85 டி.எம்.சி.
வெளியேற்றத்தகுந்த நீர் சேமிப்பு அளவு: 56.30 டி.எம்.சி.
நீர்த்தேக்கத்தின் முழுக் கொள்ளளவு:  64 டி.எம்.சி.
கட்டாய நீர் இருப்பு அளவு:  7.7 டி.எம்.சி.
அணை வகை: கான்கிரீட் புவிஈர்ப்பு அணை
அணையின் நீளம்: 674.5 மீ. 
அணையின் உயரம்: 99 மீ.
மொத்த மதகுகள்: 17
அதிகபட்ச நீர்வெளியேற்றம்:  விநாடிக்கு 8 லட்சம் கன  அடி
மொத்த மின் உற்பத்தி: 400 மெகாவாட்
மொத்த செலவு மதிப்பீடு: ரூ.5912 கோடி.


நடந்தாய் வாழி காவிரி 


கர்நாடகமாநிலத்தின் குடகில் உள்ள தலைக்காவிரி பகுதியில் பிறக்கும் காவிரி, குடகு,  ஹாசன், மைசூரு, மண்டியா, பெங்களூரு ஊரகம், சாம்ராஜ் நகர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக சுமார் 320 கிமீ சென்று,   தருமபுரி மாவட்டத்தின் பிலிகுண்டலு வழியாக தமிழகத்தில் நுழைகிறது.  சுமார் 64 கி.மீ. தொலைவு வரை கர்நாடக எல்லையுடன் பகிர்ந்துகொண்டு, தருமபுரி,  சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் வழியாக மொத்தம் 416 கி.மீ. பயணித்து பூம்புகாரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கர்நாடகத்தில் ஹாரங்கி, ஹேமாவதி, சிம்சா, அர்க்காவதி, லட்சுமணதீர்த்தா, கபினி, தமிழகத்தில் பவானி, நொய்யல், அமராவதி, திருமணிமுத்தாறு, மோயாறு போன்ற 21 கிளை ஆறுகள் காவிரி ஆற்றில் சேருகின்றன.  1896-ஆம் ஆண்டு முதல் காவிரி ஆறு மற்றும் கிளைஆறுகளின் குறுக்கே  சுமார் 101 அணைகள்,  தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகள் கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, மேட்டூர், கல்லணை, மேலணை ஆகியவற்றில் அமைந்துள்ளன. இவற்றில் 58 அணைகள் கர்நாடகத்திலும், 39 அணைகள் தமிழகத்திலும், 4 அணைகள் கேரளத்திலும் அமைந்துள்ளன.

1896-ஆம் ஆண்டு அர்க்காவதி ஆற்றின் குறுக்கே குனிகல் பகுதியில் முதல் தடுப்பணை கட்டப்பட்டது.  காவிரி ஆற்றின்குறுக்கே 80 குறுக்கு அணைகள், 59 பெரிய-நடுத்தர நீர்ப் பாசன திட்டங்கள், 17 ஏற்ற நீர்ப் பாசன திட்டங்கள், 14 நீர்மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. காவிரி ஆற்றில் மொத்தம் 740 டி.எம்.சி. தண்ணீர் உற்பத்தியாவதாகவும் இதில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி., கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி., கேரளத்திற்கு 30 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. பங்கிட்டுக்கொள்ள வேண்டும் எனவும் காவிரி நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த இறுதித் தீர்ப்பில் கூறியிருந்தது.

தமிழகத்திற்கு ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.  இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்கவேண்டிய 192 டிஎம்சி தண்ணீரில் 14.75 டிஎம்சி தண்ணீரைக் குறைத்து, 177.25 டிஎம்சி தண்ணீர் அளிக்க வேண்டும் எனக் கூறியது.  இது தமிழக விவசாயிகள்,  அரசியல்வாதிகளுக்குப்   பேரிடியாக விழுந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com