கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி

அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி

அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

விழாவில் ராகுல் காந்தி, ரஜினிகாந்த் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவரது சிலை திமுக தலைமை அலுவலகமான தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் திறப்பு விழா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. 

சோனியா வருகை:  விழாவுக்காக தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.20 மணியளவில் சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் வந்தனர். அவர்களை மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதி முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் அவரை வரவேற்றனர். அங்கிருந்து சோனியாவும், ராகுலும் ஒரே வாகனத்தில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். 

பின்னர் அங்கிருந்து மாலை 5 மணியளவில் சோனியாவும், ராகுலும் புறப்பட்டு அறிவாலயத்துக்கு 5.10 மணியளவில் வந்தனர்.

சிலை திறப்பு: அறிவாலயத்தில் விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர். விழாவுக்கு பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார். மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து, சிலையைத் திறந்து வைக்குமாறு சோனியாவுக்கு அழைப்பு விடுத்தார். 

அதைத் தொடர்ந்து சோனியா காந்தி மாலை 5.18 மணியளவில் பொத்தானை அழுத்தி, கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார். சிலை திறந்து வைக்கப்பட்டபோது, கருணாநிதி செம்மொழி மாநாட்டுக்காக எழுதிய "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' பாடல் ஒலிக்கப்பட்டது.

சிரித்தபடியே தொண்டர்களைப் பார்த்து கருணாநிதி கையசைப்பது போன்று சிலை வடிக்கப்பட்டிருந்தது.

படம்பிடித்த ராகுல் காந்தி: விழா மேடையிலிருந்து ராகுல் காந்தி இறங்கும்போது கருணாநிதியின் சிலையை தனது கைப்பேசியில் படம் பிடித்துக் கொண்டார்.

அண்ணா சிலையும் திறப்பு: அறிவாலயத்தில் ஏற்கெனவே அண்ணா சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்தச் சிலையும் வெண்கலச் சிலையாக மாற்றப்பட்டது. இதுவும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. 

ரஜினி பங்கேற்பு:  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நடிகர்கள் ரஜினிகாந்த், சத்ருகன் சின்ஹா, நாசர், பிரபு, விவேக், வடிவேலு, மயில்சாமி, நடிகை குஷ்பு, பாடலாசிரியர் வைரமுத்து, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் செல்வி, மகன் மு.க.தமிழரசு, துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அருள் நிதி, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  விழாவுக்கு வந்தவர்களை மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் வரவேற்றனர்.

நினைவிடத்தில் அஞ்சலி:  மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி, கருணாநிதி நினைவிடத்திலும்   சோனியாவும், ராகுல் காந்தியும் மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com