மெரினாவில் காவல் ஆணையருடன், மாநகராட்சி ஆணையர் நடைப்பயிற்சி செல்லலாம்: நீதிமன்றம் அறிவுரை

சென்னை மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருடன், மாநகராட்சி ஆணையரும் தினமும் நடைப்பயிற்சி செல்லலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மெரினாவில் காவல் ஆணையருடன், மாநகராட்சி ஆணையர் நடைப்பயிற்சி செல்லலாம்: நீதிமன்றம் அறிவுரை

சென்னை மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருடன், மாநகராட்சி ஆணையரும் தினமும் நடைப்பயிற்சி செல்லலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அடுத்த ஒரு மாத காலத்துக்கு இருவரும் ஒன்றாக நடைப்பயிற்சி மேற்கொண்டு, அப்போது, மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகளையும் ஆய்வு செய்யலாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சென்னை மெரீனா கடற்கரையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி ஆணையர் இன்று நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். மெரினாவை பராமரிக்க ஒதுக்கும் நிதி உள்ளிட்டவை குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்த பல்வேறு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. கடற்கரையை சுத்தப்படுத்த 3 ஷிப்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மெரினா கடற்கரைப் பகுதியில் கடை அமைக்க 1,544 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கருத்துக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், சென்னை காவல் ஆணையருடன், மாநகராட்சி ஆணையர் தினமும் நடைப்பயிற்சி செல்ல நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும் இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்க செய்ய சென்னை மாநரகாட்சிக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், உள் கட்டமைப்பு வசதி விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.

வழக்கின் பின்னணி: 
நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் 12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால் ஆழ்கடல் மீன்பிடிப்புத் தொழிலில் ஈடுபடக்கூடாது என மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்தும், முராரி கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் எனக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக மீனவர்கள் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் பீட்டர் ராயன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது மத்திய அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது. 

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மெளரியா, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்தார். அப்போது வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முராரி கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. மேலும் மெரீனா கடற்கரையை சுத்தப்படுத்த மீனவர் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் எந்த மாதிரியான ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என கேள்வி எழுப்பியது. அப்போது வழக்குரைஞர் மெளரியா, இது குறித்து மீனவப் பிரதிநிதிகளிடம் பேசிவிட்டு கருத்து தெரிவிப்பதாக கூறியிருந்தார். இதே போல் மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரிய மற்றொரு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையரை எதிர்மனுதாரராகச் சேர்த்து, மெரீனா கடற்கரையை தன்னார்வலர்கள், மீனவர்கள் உள்ளிட்டோரைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்குகள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், மெரீனா கடற்கரையின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான செயல் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் டிசம்பர் 17 ஆம் தேதி நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும். இந்த சுத்தப்படுத்தும் பணிகளில் நடைபாதைகளில் உள்ள மீன் வியாபாரிகளையும் ஒருங்கிணைத்து தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com