திமுக கூட்டணியில் பழம் கட்சி இணையுமா..? 

கசப்புகளை மறந்து பழம் நழுவி பாலில் விழுந்த கதையாய் திமுக கூட்டணியில் பழம் கட்சியான பாமக இணையுமா என்ற காத்திருப்பில்
திமுக கூட்டணியில் பழம் கட்சி இணையுமா..? 


கசப்புகளை மறந்து பழம் நழுவி பாலில் விழுந்த கதையாய் திமுக கூட்டணியில் பழம் கட்சியான பாமக இணையுமா என்ற காத்திருப்பில் கூட்டணி கட்சியினர் இருந்து வருகின்றனர். 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கான ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முதல் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியின் காரணமாக, 3 மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் திமுக கூட்டணி மேலும் வலுப்பெற போவதாக தகவல்கள் வெளியான. அதனை உறுதிபடுத்து விதமாக நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவச் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவிற்கு பின்னர் நந்தனத்தில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்தார். ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின்னர் தமிழகத்தைப் பொறுத்தவரை வரும் மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரும் என்பது உறுதியாகிவிட்டது. திமுக-காங்கிரஸ் கூட்டணி அமையுமா என்ற குழப்பத்திற்கு இதன் மூலம் விடை கிடைத்துள்ளது.

ஸ்டாலின் ராகுல் காந்தியை முன்னிறுத்தியதற்கு கூட்டணி கட்சியினரிடையே மறைமுகமாகவும், நேரிலும் எதிர்ப்புகளும், விவாதங்களும் எழுந்து வரும் நிலையில், மதவெறியின் பிடியிலிருந்து நாடு விடுபட்டு ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டுமென்றால் பாசிசத்தை எதிர்த்து நிற்கும் ஜனநாயகப் படையினை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த வலுவான தலைமை என்ற அடிப்படையில்தான் ராகுல்காந்தியை முன்மொழிந்து உள்ளேன்.

மதவெறியை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வு கொண்ட தோழமை சக்திகள் இதனைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தற்போதைய சூழலில் இதுகுறித்து தோழமைக் கட்சிகளுக்குள் விவாதங்கள் ஏற்படலாம். ஜனநாயகத்தில் விவாதங்கள் வழியேதான் விடிவுகள் பிறந்து உள்ளன.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இருண்டு கொண்டிருக்கும் இந்தியா விடிவு பெற இந்த விவாதங்கள் கூட நல்ல விளைவுகளை உண்டாக்கும். ஜனநாயகம் காத்திட ராகுலின் கரத்தை வலுப்படுத்துவோம். நாசக் கரத்தை வீழ்த்திட நேசக் கரங்களாய் இணைவோம் என பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்தது ஏன்? என்பதற்கு ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

ஸ்டாலின் அறிவிப்புக்கு பின்னர் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைவதற்காக தமிழகத்தில் பல கட்சிகளும் முனைப்புக் காட்டத் தொடங்கியுள்ளன. 

மதிமுக, விசிக கட்சிகளுக்கும் தமிழக மக்களிடையே பெரும்பான்மை குறைந்து வரும் நிலையில்,  திமுக கூட்டணியில் மதிமுக, விசிக குறித்து துரைமுருகன் தெரிவித்த கருத்தால் சலசலப்பு ஏற்பட்டது. இதனை ஸ்டாலினும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

இதனிடையே வைகோ, திருமாவளவன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. கூட்டணிக்கா இல்லை என்றாலும் நட்புக்காக கூட அவர்களின் பிரச்னையை பேசி தீர்க்க ஸ்டாலின் முயற்சிக்க வில்லை. பின்னர் அவர்களாகவே ஒருவழியாக சமரசம் அடைந்துகொண்டனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் வைகோ, திருமாவளவனுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல். மேடைக்கு எதிரே அமர வைக்கப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வைகோவும், திருமாவளவனும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. 

ஆனால், டி.ராஜா, டி.கே.ரங்கராஜன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு மேடையில் வழங்கப்பட்டடிருப்பதன் மூலம் பழைய தோல்விகளுக்கு பழிவாங்கும் விதமாக இந்த நடவடிக்கைகளை ஸ்டாலின் எடுத்துள்ளாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

இந்நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தங்களது வாக்கு வங்கிகளை பலமாக வைத்துள்ள பழம் கட்சி, மத்தியில் ஆளும் பாஜவுடனோ, மாநிலத்தில் ஆளும் அதிமுகவுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள விருப்பமில்லாத நிலையில், நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள கட்சி அல்லது அமமுகவுடனோ கூட்டணி வைத்துக்கொள்ளலாமா என்று ஆலோசனை நடத்தியத்திற்கு முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பே தெரிவித்து வந்துள்ளனர். தனித்து போட்டியிடலாம் என்றால், அது கடந்த முறை தேர்தலை போன்று மும்முனைப் போட்டியாக மாறும், வாக்குகள் சிதறும், கடந்த முறை மக்கள் நலக்கூட்டணி செய்தது போன்றே இந்த தேர்தலிலும் வாக்குகள் பிரிந்து அது ஆளும் கட்சிக்கே சாதகமாக அமைந்து விடும் என பழம் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும், வட மாவட்டங்களிலும், சில தென்மண்டலங்களிலும் பழம் கட்சிக்கு பலமான வாக்குகள் உள்ளதால், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டால் வெற்றி சாத்தியம் என பழம் கட்சி நிர்வாகிகளும், இதையே திமுகவில் உள்ள மூத்த தலைவர்களும் அக்கட்சி தலைமைகளுக்கு தங்களது ஆலோசனையாக தந்துள்ளனர். 

இந்நிலையில் தான் திமுகவின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், கடந்த கால கசப்புகளை எல்லாம் மறந்துவிட்டு திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பழம் கட்சியை அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அரசியல் கட்சியினரிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

விரைவில் பழம் கட்சி தங்களது பிடிவாத நிலையில் இருந்து சற்று நழுவி பாலில் விழும் என்று திமுக-காங்கிரஸ் தலைவர்கள் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியாகலாம் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.  

பழம் கட்சியை கூட்டணியில் இணைக்கும் நோக்கத்தில் தான் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணி கட்சி என்று அழைக்காமல் தோழமை கட்சி என்றே அழைத்து வருகிறார்கள் எனவும், அதன் முன்னோட்டமாகவே கருணாநிதி சிலை திறப்பு பொதுக்கூட்டத்தில் வைகோ, திருமாவளவனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மேடைக்கு எதிரே அமர வைக்கப்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.

2016 பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்காமல், மக்கள் நல கூட்டணியை உருவாக்கி தேமுதிகவையும் இணைத்து வாக்குகளை பிரித்து, மீண்டும் அதிமுகவை ஆட்சி அமைய மறைமுகமாக உதவியவர்கள் வைகோ, திருமாவளன் போன்றோர்கள் என்பது அப்போதே பேசப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்கப் போவதாக வைகோ பேசி வருகிறார். கூட்டணியில் இடம் பிடித்துவிட வேண்டும் என வைகோவும், திருமாவும் முட்டி மோதி வருகின்றனர். ஸ்டாலினோ இவர்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது பல்வேறு சம்பவங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

திமுக கூட்டணியில் இருப்பதும் - விலகுவதும் மதிமுக, விசிகவுக்கு புதியதல்ல என்றாலும் பழம் கட்சி திமுகவுடன் இணையும் என்ற தகவலால் பழம் கட்சியினர் சற்று உற்சாகம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

துரைமுருகன் கூட்டணி முயற்சியில் வெற்றி பெறுவரா? உள்ளே, வெளியே யார்..? யார்..? என்பது வெளிச்சத்திற்கு வரும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com