வேலையை ராஜினாமா செய்துவிட்டு விரும்பும் கட்சியில் இணையலாமே? அதிகாரிகளுக்கு நீதிமன்றம் காட்டம்

விதிமீறல் பேனர்கள் தொடர்பான வழக்கில், அதிகாரிகள், வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்படும் கட்சியில் இணையலாமே என்று சென்னை உயர் நீதிமன்றம் காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளது.
வேலையை ராஜினாமா செய்துவிட்டு விரும்பும் கட்சியில் இணையலாமே? அதிகாரிகளுக்கு நீதிமன்றம் காட்டம்


சென்னை: விதிமீறல் பேனர்கள் தொடர்பான வழக்கில், அதிகாரிகள், வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்படும் கட்சியில் இணையலாமே என்று சென்னை உயர் நீதிமன்றம் காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளது.

விதிமீறல் பேனர்கள் தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சரமாரிக் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழா மற்றும் ரஜினிகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்தது.

அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது, விதியை மீறி பேனர் வைத்த அரசியல்வாதிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வழக்குப் பதிவு செய்யவில்லை? என்று காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்படும் கட்சியில் இணைய வேண்டியதுதானே?

விதிமீறல் பேனர்களை வைப்போர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு ஏராளமான டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பேனர்களை வைக்கக் கூடாது என்ற விதியை ஏன் பின்பற்றுவதில்லை?

காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு இருக்கிறதா? விழிப்புணர்வு இருந்தால் தொடர்ந்து ஏன் இப்படி நடக்கிறது?

பேனர் வழக்குகளை விசாரித்து ஆணையிட்டு சோர்வடைந்துவிட்டோம். பேனர் வழக்குகளில் இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது. விதி மீறல் பேனர் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழக அரசு நாளையே பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com