தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் திடுக்கிடும் தகவல்: 12 பேரின் தலை, மார்பில் சுடப்பட்டது அம்பலம்!

தற்காப்புக்காக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் உடலில் தலை அல்லது நெஞ்சகப் பகுதியில் குண்டு பாய்ந்து
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் திடுக்கிடும் தகவல்: 12 பேரின் தலை, மார்பில் சுடப்பட்டது அம்பலம்!


தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி பலியான 2 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடியில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சூற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர்ச்சியாக 100 நாள்கள் போராடி வந்தனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும், மக்களை பாதுகாக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்து வந்தது.

இந்நிலையில், கடந்த மே 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தின்போது, போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் ஈவு இரக்கமின்றி தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அரசு, தனியார் வாகனங்கள் எரிக்கப்பட்டது.

பொது மக்கள் வன்முறையில் ஈடுபட்டதால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தற்காப்புக்காகவும், சூழ்நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கி சூடு தொடர்பாக இதுவரை எந்தவொரு காவல்துறை அதிகாரிகளும் கைது செய்யப்படவோ அல்லது குற்றம்சாட்டப்படவில்லை.

இதையடுத்து தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்த ஆணை பிறப்பித்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடி சம்பவங்கள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, தமிழக அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் அதன் மீது தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமித்து அரசு உத்தரவிட்டது. 

அதன்படி, அருணா ஜெகதீசன் தனது முதல்கட்ட விசாரணையை கடந்த ஜூன் 4 ஆம் தேதி தொடங்கினார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து 5 கட்டமாக 87 சாட்சிகளிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். 209 சான்றாவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. 6 ஆவது கட்ட விசாரணையாக போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக பலியானவர்களுக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றில் வெளியாகியுள்ளது.

தற்காப்புக்காக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் உடலில் தலை அல்லது நெஞ்சகப் பகுதியில் குண்டு பாய்ந்து இருந்ததாகவும், அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மீது பின்னாலிருந்து தலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் பிரேத பரிசோதனை அறிக்கையை அரசு மருத்துவமனை தடயவியல் மருத்துவ வல்லுநர்கள் தயாரித்துள்ள அறிக்கையில் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலை, என்டிடிவி செய்தி நிறுவனமும் அம்பலப்படுத்தி உள்ளது. 

அந்த அறிக்கையின்படி, பிரேத பரிசோதனை அறிக்கையில் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

கொல்லப்பட்டவர்களில் மிகவும் இளம் வயதானவர் ஸ்னோவ்லின்(17) என்ற மாணவி. இந்த மாணவியின் தலையின் பின்புறத்தில் சென்ற குண்டு, வாய் வழியாக வெளியே வந்துள்ளதாகவும், குண்டு காயம் ஏற்பட்டதால், இதயம் தனது இயக்கத்தை நிறுத்தியதால் மரணம் நிகழ்ந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

கழுத்து பின்புறம் துப்பாக்கி குண்டு பாயந்து காயம்படுத்தியதின் காரணமாக இறந்தவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு கொல்லப்பட்டதாகத் தெரிகிறது என உடற்கூறு பரிசோதனை செய்த தடவியல் மருத்துவ வல்லுநர்கள் அறிக்கை தந்துள்ளனர்.

பலியான 13 பேரில், 12 பேர் தலையிலும், மார்பிலும் சுடப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர், பின்பக்கமாக சுடப்பட்டுள்ளனர். 2 பேருக்கு தலையில் குண்டு ஊடுருவிச் சென்றுள்ளது.

ஜான்சி(40) என்ற பெண், தூத்துக்குடி கடலோரத்தில் ஒரு குறுகலான தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சில நூறு மீட்டர் தூரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது காதில் குண்டு பாய்ந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதேபோன்று மணிராஜன்(34) என்ற இளைஞருக்கு நெற்றியின் வலப்பக்கத்தில் குண்டு பாய்ந்ததால் மூளையில் காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக அதிரிச்சியான தகவல் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 11 பேரின் குடும்பங்களை, ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டதாகவும், அதில் 10 குடும்பத்தினர் தாங்கள் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளதாகவும், ஒரு குடும்பத்தினர் மட்டும் வழக்குரைஞரைத் தொடர்பு கொண்டு சட்ட நடவடிக்கை குறித்து பேசி வருவதாகவும், நீதிக்காக போராட போவதாக தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

மேலும், துப்பாக்கிச் சூட்டில் 69 குண்டுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், 3 எஸ்எல்ஆர் வகை துப்பாக்கியிலிருந்து 30 குண்டுகளும், 303 ரைஃபில்ஸ் வகை துப்பாக்கிகள் மூலமாகவும் 4 ரவுண்டுகளும், 410 வகை துப்பாக்கியில் இருந்து 12 ரவுண்டுகள் சுடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இந்த பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து கேட்டதற்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமோ, போலீஸ் அதிகாரிகளோ, விசாரணை அதிகாரிகளோ எந்த பதிலும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இதேபோன்று தூத்துக்குடி மருத்துவ கல்லூரியின் தடயவியல் துறை தலைவரும், ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமமும் எந்தவித கருத்தும் கூற மறுத்துவிட்டதாக கூறியுள்ளது. 

கலவரத்தை ஒடுக்குவதற்கு துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்த வேண்டும். ஆனால், ஆட்களை கொல்லும் வகையில் சுடக்கூடாது என்று இந்திய காவல்துறை விதிகள் கூறுகிறது. கலவரம் நடைபெற்றால் எச்சரித்தும் அது கட்டுக்கடங்காமல் போனால், முதலில், குறைந்த பட்சம் இடுப்புக்கு மட்டத்திற்கு குறைவாக முட்டிக்கு கீழ்தான் குறி பார்த்து சுட வேண்டும். அதிலும் கும்பலில் பெரிதும் அச்சுறுத்தலாக உள்ளவர்களின் இருப்பிடத்தையே குறிவைக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை சட்ட விதிமுறைகள் உள்ளது. ஆனால், சுடப்பட்டதில் பெரும்பாலானோருக்கு நெஞ்சகப் பகுதி அல்லது தலையையே குறி பார்த்து சுட்டப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல், இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com