மாணவர்கள் குறைந்த பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூட முடிவு: ராமதாஸ் கண்டனம்

மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூடதமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூடதமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் சமூகநலத் துறை ஆணையர் அமுதவல்லி, மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மாணவர்கள் எண்ணிக்கை 25-க்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூடி, அவற்றில் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்களை, காலியாக உள்ள இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். 
இந்தப் பணிகள் அனைத்தையும் டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி பார்த்தால், குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட அரசு பள்ளிகளின் சத்துணவு மையங்கள் அதிரடியாக மூடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 25-க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட சத்துணவு மையங்களின் எண்ணிக்கை 8 ஆயிரம் ஆகும். 
ஒரு மையத்துக்கு ஓர் அமைப்பாளர், ஒரு சமையலர், ஒரு சமையல் உதவியாளர் இருப்பர். 
இவர்களில் சமையல் உதவியாளர் தவிர்த்த மீதமுள்ள இரு பணியிடங்கள் ரத்து செய்யப்படும் என்பதால் 16 ஆயிரம் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டு விடும். இது கண்டிக்கத்தக்கது.
சத்துணவு மையங்கள் மூடப்பட்ட பள்ளிகளுக்கு இன்னொரு பள்ளியில் இருந்து சமைத்து அளிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இது ஏழை மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநிற்றலுக்குத் தான் வழிவகுக்கும்.
எனவே, அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்யவும், இடை நிற்றலைத் தடுக்கவும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே உணவு தயாரித்து வழங்க வேண்டியது அவசியமாகும். 
அதனால், சத்துணவு மையங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com