கரூர்-சேலம் ரயில் பாதை மின் மயமாக்கல் பணி நிறைவு: இன்று சோதனை ஓட்டம்

கரூர்-சேலம் ரயில் பாதை மின் மயமாக்கல் பணி முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், சோதனை ஓட்டம்
கரூர்-சேலம் ரயில் பாதை மின் மயமாக்கல் பணி நிறைவு: இன்று சோதனை ஓட்டம்


கரூர்-சேலம் ரயில் பாதை மின் மயமாக்கல் பணி முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதனையடுத்து, மின்பாதை பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
85 கிலோ மீட்டர் தொலைவு உள்ள சேலம்-கரூர் ரயில் பாதை ரூ.100 கோடி செலவில் மின்மயமாக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
நாமக்கல் ரயில் நிலையத்தில் மின்மயமாக்கும் திட்டத்தில் அமைக்கப்பட்ட துணை மின் நிலையம், சமிக்கை அறையின் செயல்பாடுகள், ரயில் பாதை, ரயில் நிலைய பாதுகாப்பு அம்சங்கள், பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை சின்னங்கள், அவை பொருத்தப்பட்டுள்ள இடங்கள் ஆகிய அம்சங்கள் குறித்து ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் கே.ஏ.மனோகரன், தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், நாமக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் கே.ஏ.மனோகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 25 கிலோ வோல்ட் திறனுள்ள இந்தப் பாதையில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் வெள்ளிக்கிழமை மாலை முடிக்கப்பட்டு, கரூரில் இருந்து மின் மயமாக்கப்பட்ட பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். 
இந்தச் சோதனை ஓட்டத்துக்குப் பிறகு அதற்கான பரிந்துரையை ரயில்வேயிடம் அளிப்போம். அதன்பிறகு முறையாக மின் பாதையில் ரயில் இயக்கும் நாள் அறிவிக்கப்படும். அதற்கான பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. இந்தப் பாதை மின் மயமாக்கப்பட்டு உள்ளதால், ரயில்வேக்கு டீசல் செலவு, அன்னிய செலாவணி குறையும். டீசலில் செல்லும் அதே வேகத்தில்தான் ரயில் இயக்கப்படும்.
பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ரயில் பாதைகள், மின் சாதனங்கள் அருகில் செல்லக் கூடாது. ரயில் பாதையில் அமர, நடக்கக் கூடாது. பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை உத்தரவுகள் கடைப்பிடிக்கப்படுவது குறித்து கண்காணிக்கப்படும்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதைகள் மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி-தஞ்சாவூர் மின் பாதை பணிகள் முடிந்து தயாராக உள்ளது. தஞ்சாவூர்-மானாமதுரை-மதுரை-ராமேஸ்வரம், சேலம்-விருத்தாசலம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் ரயில் பாதை மின்மயமாக்கும் பணிகள் அனைத்தும், இன்னும் 2 ஆண்டுகளில் முடிவடையும் என்றார்.
இந்த ஆய்வின்போது தெற்கு ரயில்வே சேலம் கோட்ட வணிக மேலாளர் எ.விஜூவின், ரயில்வே துறை முதுநிலை அலுவலர்கள் பி.மணி, பெருமாள் நந்தலாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com