லோக் ஆயுக்த தேர்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்:  மு.க.ஸ்டாலின்

லோக் ஆயுக்த தேர்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அரசு செயலாளருக்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
லோக் ஆயுக்த தேர்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்:  மு.க.ஸ்டாலின்


லோக் ஆயுக்த தேர்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று அரசு செயலாளருக்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
லோக் ஆயுக்த தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவை அமைப்பதற்காக வெள்ளிக்கிழமை (டிச.28) நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு அரசு செயலாளர் சீ.சுவர்ணா கடிதம் எழுதியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்து மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அனுப்பிய கடிதம்:
லோக் ஆயுக்த அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் தற்போது அமைக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்த அமைப்புக்கு, ஊழல் புகார்கள் மீது பொதுநலனுக்குப் பயனுள்ள வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை. 
இந்த அமைப்புக்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் முதல்வர் தலைமையிலான 3 பேர் அடங்கிய தேர்வுக்குழு, ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்குழு உயர்நீதிமன்ற நீதிபதி தலைவராக இடம்பெறும் 5 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக இல்லை. லோக் ஆயுக்த தலைவராக அதிகாரி ஒருவரை நியமிக்கும் வகையில் உள்ள சட்டப்பிரிவால் இந்த அமைப்பு, அதிகாரிகள் தலைமை தாங்கும் அமைப்பாக உருமாற்றப்படும் அபாயம் உள்ளது. 
ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு துணைச் செயலாளர் தலைமையில் விசாரணைக்குழு என்பது வலுவற்றது மட்டுமின்றி வெறும் கண்துடைப்பு ஆகும்.
ஊழல் புகார்கள் மீது யாரும் செல்வாக்குப் பிரயோகித்திட இயலாதபடி, கடுமையான நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக இருப்பதற்குப் பதில், அரசுக்கு வெறும் பரிந்துரை செய்யும் அஞ்சல் நிலையம் போன்ற அமைப்பாகவே லோக் ஆயுக்த அமைப்பு உருவாக்கப்படுகிறது.
ஊழல் பற்றி தகவல் கொடுப்போருக்கு எவ்வித பாதுகாப்பும் சட்டத்தில் இல்லாததால், புகார்கள் கொடுக்கவே எவரும் அஞ்சும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
ஊழல் வழக்குகளை புலனாய்வு செய்யும் குழுவோ, நீதிமன்றங்களில் வழக்கை நடத்தும் குழுவோ இந்த லோக் ஆயுக்தவில் இல்லை. அனைத்துக்கும் மேல் அரசு ஒப்பந்தங்கள், நியமனங்களில் ஊழல்கள், உள்ளாட்சித் துறையில் நடைபெறும் ஊழல்கள் போன்றவற்றை விசாரிக்கக் கூடாது என்ற லோக் ஆயுக்த சட்டப்பிரிவு, விசாரணையின் நகங்களைப் பிடுங்கி, ஊழல் ஒழிப்பு என்ற அடிப்படை நோக்கத்தையும் தீவிரத்தையும் பாழ்படுத்தியுள்ளது.
மேலும், உருவாக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்த விதிகளில் ஊழல் புகார்கள் குறித்து ரகசிய விசாரணை நடைபெறும் என்று வெளிப்படைத்தன்மைக்கு விலங்கிட்டிருப்பது இந்த அமைப்பை உருவாக்க நாடாளுமன்றமும், உச்சநீதிமன்றமும் வரையறுத்த அடிப்படையையே தகர்த்தெறிந்துள்ளது. இப்படிப்பட்ட ஓர் அமைப்பை திமுக எதிர்க்கிறது. எனவே,தேர்வுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க இயலாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com