குரூப் 2 முதன்மைத் தேர்வை முன்கூட்டியே நடத்தக் கூடாது:  அன்புமணி ராமதாஸ்

கஜா புயலால் காவிரி டெல்டா பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குரூப்2 முதன்மைத் தேர்வை முன்கூட்டியே நடத்தக் கூடாது


கஜா புயலால் காவிரி டெல்டா பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குரூப்2 முதன்மைத் தேர்வை முன்கூட்டியே நடத்தக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
குரூப் 2 முதன்மைத் தேர்வு மே மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட வேண்டிய முடிவுகளை இரு மாதங்கள் முன்பாக கடந்த 17ஆம் தேதியே வெளியிட்டது. 
முதல்நிலைத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதால், முதன்மைத் தேர்வுகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதை விட மூன்று மாதங்கள் முன்பாக, வரும் பிப்ரவரி 23ஆம் தேதி நடத்தப்படும் என்று பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களை கடந்த நவம்பர் 16ஆம் தேதி தாக்கிய கஜா புயல் அப்பகுதிகளைச் சிதைத்து விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். அத்துடன் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்காக மாணவர்கள் வைத்திருந்த புத்தகங்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாசமாகிவிட்டன. 
எனவே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி, குரூப் 2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை முன்கூட்டியே பிப்ரவரி மாதத்தில் நடத்தாமல் ஏற்கெனவே அறிவித்திருந்தவாறு மே மாதத்தில் நடத்த பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com