நீட் தேர்வு முதல் நிதி ஆதாரம் வரை தமிழகத்தை பாஜக வஞ்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

நீட் தேர்வு தொடங்கி, நிதி ஆதாரம் வரை தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வு முதல் நிதி ஆதாரம் வரை தமிழகத்தை பாஜக வஞ்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


நீட் தேர்வு தொடங்கி, நிதி ஆதாரம் வரை தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொதுமக்களை வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.
மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராகவும், மாநிலத்தை ஆளும் மக்கள் விரோத அதிமுக ஆட்சிக்கு எதிராகவும் மக்கள் படையை ஒருங்கிணைக்கும் பணியே திமுகவினரின் பணியாகும்.
நீட் தேர்வில் தொடங்கி, நீர்ஆதாரம், நிதி ஆதாரம் எல்லாவற்றிலும் பாஜக அரசு தமிழகத்துக்கு வஞ்சகம் செய்கிறது. இயற்கையின் பெருஞ்சீற்றமான கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்குக்கூட பிரதமர் நரேந்திரமோடிக்கு நேரமில்லை. அதற்குரிய நிவாரண நிதியை அளிப்பதில்கூட வேகமில்லை. 
இதற்கு முன் தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயல், ஒக்கிப் புயல் நேரங்களிலும் மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கு எப்படி இருந்தது என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் அறிவர். மத்திய அரசை தட்டிக் கேட்க வேண்டிய மாநில ஆட்சியாளர்கள் தில்லிக்கு அடிபணிந்து போகின்றனர். 
புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மக்கள் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நிவாரணம் கேட்டுத் தவிக்கின்றனர். 
ஜனநாயகத்தின் ஆணிவேர் என்பவை உள்ளாட்சி அமைப்புகள். அவை வலிமையாக இருந்தால்தான், மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறும். அந்த அதிகாரத்தை வழங்க மறுக்கும் அதிமுக ஆட்சியாளர்கள், மாநிலத்துக்குரிய அதிகாரத்தை மத்திய அரசிடம் அடமானம் வைத்துள்ளனர்.
இவை அனைத்துமே ஜனநாயகத்தை முடக்கிப் போடும் கொடுஞ்செயல். இவற்றிலிருந்து மீள்வதற்கான தொடக்க நாளாகத்தான் மக்களிடம் செல்வோம், சொல்வோம் , மனங்களை வெல்வோம் என்ற முப்பெரும் முழக்கங்களுடன் ஜனவரி 8ஆம் தேதி முதல் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டத்தைக் கூட்டி மக்களைச் சந்திக்க உள்ளோம். 
இந்தக் கூட்டத்தை ஆடம்பர ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி மரத்தடி, சந்தை, கலையரங்கம், பொதுத்திடல், பள்ளி வளாகம் என அனுமதிக்கப்படும் இடங்களில் இருநூறுக்கும் குறைவில்லாத பொதுமக்கள் மற்றும் திமுகவினர் பங்கேற்கும் வகையில் ஊராட்சி சபைக் கூட்டங்களை ஊராட்சி செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com