Enable Javscript for better performance
காவிரி விவகாரத்தில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரத்தில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ops

    காவிரி விவகாரத்தில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்றார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். 
    தஞ்சாவூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: 
    வனவிலங்குகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு இருக்கும்பட்சத்தில் நியூட்ரினோ உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது.
    காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். ஆனால் நிகழாண்டில் 74 டிஎம்சி தண்ணீரை அம்மாநிலம் வழங்கவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிரைக் காப்பாற்ற 7 முதல் 10 டிஎம்சி வரை தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. இந்த தண்ணீர் இருந்தால் மட்டுமே கருகும் பயிரை காப்பாற்ற முடியும். இதுதொடர்பாக கர்நாடக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதல்வர், தேதி கேட்டு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அந்தக் கடிதத்துக்கு இதுவரை முறையான பதில் வரவில்லை.
    பல ஆண்டுகளாக தொடரும் காவிரி பிரச்னையைத் தீர்ப்பதற்காக காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. உரிய விசாரணைக்குப் பிறகே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. 
    காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. இதில் தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தீர்வு இதுவரையில் கிடைக்கவில்லை. எனவே, காவிரி விவகாரத்தில் நாங்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றார் ஓ. பன்னீர்செல்வம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai