Enable Javscript for better performance
தப்பியோடிய ரௌடிகளை பிடிக்க கேரளம் விரைந்தது தனிப்படை- Dinamani

சுடச்சுட

    

    தப்பியோடிய ரௌடிகளை பிடிக்க கேரளம் விரைந்தது தனிப்படை

    By DIN  |   Published on : 09th February 2018 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை அருகே நடைபெற்ற ரெüடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது தப்பியோடி தலைமறைவான ரௌடிகளை கைது செய்ய கேரள மாநிலத்துக்கு தனிப்படையினர் விரைந்துள்ளனர்.
    சென்னை வண்டலூர் வடக்கு மலையம்பாக்கம் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் சூளைமேட்டைச் சேர்ந்த ரௌடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் சென்னையைச் சேர்ந்த சுமார் 100 ரௌடிகள் பங்கேற்றனர். இது குறித்து தகவலறிந்த சென்னை போலீஸார், ரௌடிகளை பிடிக்க அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். இதில் அங்கிருந்த 75 ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். முக்கிய ரௌடிகளான பினு, அவரது கூட்டாளிகள் கனகு என்ற கனகராஜ், விக்கி என்ற விக்னேஷ் உள்ளிட்ட 25 பேர் தப்பியோடினர்.
    இந்நிலையில், கைது செய்யப்பட்ட 75 பேரில் 71 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் புதன்கிழமை இரவு அடைக்கப்பட்டனர். 4 பேரில் இருவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இருவர் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டு, கடிதம் எழுதிக் கொடுத்து வெளியேறினர்.
    விரைந்தது தனிப்படை: இதற்கிடையே தப்பியோடிய ரௌடிகளை கைது செய்வதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார், தப்பியோடிய ரௌடிகளை தேடி சேலம், வேலூர், கேரள மாநிலம் ஆகியவற்றுக்கு சென்றுள்ளனர். இதில் பினு அண்மைக்காலமாக கேரளத்தில் தலைமறைவாக வசித்து வந்ததாலும், அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர் அங்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கேரள மாநிலத்துக்குச் சென்று அம்மாநில போலீஸார் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
    உயர் அதிகாரிகள் எச்சரிக்கை: தப்பியோடிய ரௌடிகளிடம் துப்பாக்கிகள் இருப்பதால், அவர்களை கைது செய்வதற்கு செல்லும் போலீஸார் தற்காப்புக்காக கையில் துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 
    ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்கச் சென்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த சம்பவத்தை அடுத்து இத்தகைய எச்சரிக்கை உணர்வு கண்டிப்பாக போலீஸாருக்கு இருக்க வேண்டும் எனவும் உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 
    அத்துடன், போலீஸார் ரௌடிகளை கைது செய்ய நெருங்கும்போது அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    செம்மரக்கட்டை பறிமுதல்: இதற்கிடையே பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்த வேலு என்பவருக்கு சொந்தமான வாகன பழுது நீக்கும் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும், பொருள்களையும் அகற்றும் பணியில் போலீஸார் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே இருந்த ஒரு தண்ணீர் குட்டையில் சில மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்த போலீஸார் அவற்றை எடுத்து பார்த்தனர். அவை செம்மரக்கட்டைகள் என்பதை என்பதை அறிந்த போலீஸார் உடனடியாக பறிமுதல் செய்தனர். இவற்றின் எடை சுமார் 400 கிலோவாகும். இவற்றை ரௌடி கும்பல் பதுக்கியிருந்ததா, வேறு யாரேனும் குட்டையில் போட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ரூ.32 லட்சம் மிரட்டி வசூல்: ரௌடிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு போலீஸாருக்கு மற்றொரு அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஒரு ரௌடி, சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரை மிரட்டி பணம் கேட்டுள்ளார். முதலில் பணம் தர மறுப்பு தெரிவித்துள்ள அந்த கட்டுமான நிறுவன உரிமையாளரை, அந்த ரௌடி கொலை செய்துவிடுவதாக தனது ஆள்கள் மூலம் மிரட்டியுள்ளார். இதன் பின்னர் பணம் தருவதற்கு அந்த நிறுவன உரிமையாளர் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, சென்னை அருகேயுள்ள பள்ளிக்கரணையில் 200 அடி சாலையில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை மாலை அந்த ரௌடி, தொழிலதிபரிடம் இருந்து ரூ.32 லட்சம் பெற்றுள்ளார் என்பதே அத்தகவல்.
    பணம் பெற்றுக் கொண்ட ரெüடி, பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க காரில் புறப்பட்டு சென்றுள்ளார். போலீஸார், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ரௌடிகளை சுற்றி வளைத்தபோது அந்த ரெüடியும் தப்பிச் சென்றுள்ளார். இத் தகவல்களை அறிந்த போலீஸார், அந்த தொழிலதிபரிடம் புகார் பெறுவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அந்த ரௌடியையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai