Enable Javscript for better performance
பல்கலை. ஆசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வு வாரியம் அமைக்க பரிசீலனை- Dinamani

சுடச்சுட

    

    பல்கலை. ஆசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வு வாரியம் அமைக்க பரிசீலனை

    By DIN  |   Published on : 09th February 2018 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fraud-find

    பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்கள் என்.ஜெயகுமார், பி.திருநாவுக்கரசு ஆகியோருடன் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் (இடமிருந்து 4-ஆவது).

    பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களைத் தேர்வு செய்வதில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, பல்கலைக்கழகத் தேர்வு வாரியம் அமைப்பது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.
    பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை கோவை வந்த சுனில் பாலிவால், பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
    பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆ.கணபதி, ஆளுநரால் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் பல்கலைக்கழகப் பணிகளை கவனிக்க மூன்று பேரைக் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த துணைவேந்தர் தேர்வு செய்யப்படும் வரையிலும் இந்தக் குழு தனது பணிகளை மேற்கொள்ளும். அதைப் போலவே பேராசிரியர் தர்மராஜை தாற்காலிகப் பணி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    2016-ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் இருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக உயர் கல்வித் துறை கருதியதால்தான், நியமன நடைமுறைகளை நிறுத்திவைக்கும்படி உத்தரவிடப்பட்டது. ஆனால், உயர் கல்வித் துறையின் உத்தரவையும் மீறி முன்னாள் துணைவேந்தர் கணபதி ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தை நடத்தி, நியமன உத்தரவுகளை வழங்கியுள்ளார்.
    இதையடுத்து, ஊழல் தடுப்பு, கண்காணிப்பு ஆணையரின் ஒப்புதலைப் பெற்று இது தொடர்பான விரிவான விசாரணைக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது. அந்த விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. விசாரணையின் முடிவில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் கணபதியை பணி நீக்கம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.
    அதேபோல், அடுத்த துணைவேந்தரை எப்போது தேர்வு செய்வது, அதற்கான தெரிவுக் குழு அமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். தமிழகத்தில் துணைவேந்தர்கள் நியமனத்தில் அரசு, அமைச்சர்களின் தலையீடு எதுவும் இல்லை. மேலும், இனி தகுதியானவர்கள், கண்ணியமானவர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், துணைவேந்தர்களுக்குத் தகுதிகள், அவர்களைத் தேர்வு செய்வதற்கான தெரிவுக் குழுவினருக்கானத் தகுதிகள் குறித்து கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    துணைவேந்தர் தேர்வில் யுஜிசி நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தேர்வுக் குழுவைப் பொருத்துதான் துணைவேந்தர்களும், துணைவேந்தர்களைப் பொருத்துதான் ஆசிரியர்களும் அமைவார்கள் என்பதால் அனைத்து நிலைகளிலும் தவறுகளைக் களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், துணைவேந்தர் தேர்வை வேறு வழிகளில் அதாவது, போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்யலாமா அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் போன்று பல்கலைக்கழகத் தேர்வு வாரியம் அமைத்து தேர்வு செய்யலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
    இதுபோன்ற நடைமுறை வேறு மாநிலங்களில் உள்ளதா என்று ஆய்வு செய்யப்படுகிறது. எங்காவது சிறந்த நடைமுறை, விதிகளுக்குள்பட்டு இருக்குமானால் அதை தமிழ்நாட்டில் அமல்படுத்துவது குறித்து பரிசீலனை நடத்துவோம்.
    மேலும், காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புவதிலும் வேகம் காட்டி வருகிறோம். துணைவேந்தர் தெரிவுக் குழுவின் அறிக்கை 4 மாதங்களில் அளிக்கப்பட வேண்டும் என்ற புதிய விதியின் அடிப்படையில், பெரியார், பாரதிதாசன் பல்கலைக்கழகக் காலிப் பணியிடங்கள் 7 மாதங்களிலேயே நிரப்பப்பட்டுள்ளன.
    அதேபோல், பல்கலைக்கழகங்களில் பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் போன்ற காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை, பாரதிதாசன், மதுரை காமராஜர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாரதியார், திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களில் வழக்கு நிலுவையில் இருந்ததால் பதிவாளர் பணியிடம் நிரப்பப்பட முடியாமல் இருந்தது.
    பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிலுவை வழக்குகள் முடிவடைந்துள்ள நிலையில், பதிவாளர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே, இங்கு விரைவில் புதிய பதிவாளர் நியமிக்கப்படுவார். 
    தமிழகத்தில் லஞ்சம் பெற்றதற்காகப் பணியில் இருக்கும் துணைவேந்தர் ஒருவர் பிடிபடுவது இதுவே முதல் முறை. இதுபோன்ற நடவடிக்கைகள் அரசின் மேல்மட்டத்துக்குத் தெரியாமல் நடைபெறாது. எனவே, உயர் கல்வித் துறையில் இதுபோன்ற முறைகேடுகள் இனி நடைபெறக் கூடாது என்றும் அவற்றைக் களைய வேண்டும் என்றும் அரசு முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசே போதுமான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவைப்படாது.
    பாரதியார் பல்கலைக்கழகத்தில் மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உள்ள சுமார் 5,500 தாற்காலிகப் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும், பல்கலைக்கழகங்களில் நிலுவையில் உள்ள தணிக்கைத் தடை பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றார் அவர்.
    ஜாமீன் மனு தள்ளுபடி: லஞ்சம் பெற்றபோது சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரின் ஜாமீன் மனுவை லஞ்ச ஒழிப்பு, ஊழல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. 
    இருவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai