Enable Javscript for better performance
பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 3 பேர் குழு அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 3 பேர் குழு அமைப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்வதற்காக 3 பேர் அடங்கிய நிர்வாகக் குழு வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    ரூ. 30 லட்சம் லஞ்சம் பெற்ற பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ஆ.கணபதி கடந்த 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். துணைவேந்தர் இல்லாத நேரங்களில் பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பு, மூத்த பேராசிரியரிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி, புள்ளியியல் துறைத் தலைவர் கே.கே.சுரேஷ், புதன்கிழமை முதல் துணைவேந்தரின் பொறுப்புகளை நிர்வாகம் செய்து வந்தார். அதேபோல் துணைவேந்தர் பொறுப்பை நீண்ட காலத்துக்கு கவனிப்பதற்காகப் பல்கலைக்கழக விதிகளின்படி குழு அமைப்பதற்கான ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் (சிண்டிகேட்), பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கே.கே.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உயர் கல்வித் துறை முதன்மைச் செயலரும், சிண்டிகேட் உறுப்பினருமான சுனில் பாலிவால் உள்ளிட்ட 16 சிண்டிகேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
    இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்வதற்காக சுனில் பாலிவால் தலைமையில் 3 பேர் குழு தேர்வு செய்யப்பட்டது. இந்தக் குழுவில் சுனில் பாலிவாலுடன் உயிரித் தகவலியல் துறைத் தலைவர் என்.ஜெயகுமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியின் மின்னணுவியல் துறை இணைப் பேராசிரியர் பி.திருநாவுக்கரசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர் அடுத்த துணைவேந்தர் நியமிக்கப்படும் வரையிலும் பல்கலைக்கழகப் பணிகளைக் கவனிப்பர். துணைவேந்தருக்கான அனைத்து அதிகாரங்களும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    பேராசிரியர் தர்மராஜ் பணியிடை நீக்கம்: இதற்கிடையே வியாழக்கிழமை நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில், வேதியியல் துறை பேராசிரியர் என்.தர்மராஜை பணியிடை நீக்கம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக உயர் கல்வித் துறை முதன்மைச் செயலரும் அறிவித்தார்.
    மதிவாணனும் பணியிடை நீக்கம்: அதேபோல், வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் (பொறுப்பு) மதிவாணனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரைப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மூன்று பேர் குழுவினர் நீக்கியுள்ளனர். மேலும், புதிய தொலைநிலைக் கல்வித் திட்ட இயக்குநராக (பொறுப்பு) புள்ளியியல் துறைத் தலைவர் கே.கே.சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai