Enable Javscript for better performance
மீனாட்சியம்மன் கோயில் கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

  

  மீனாட்சியம்மன் கோயில் கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 09th February 2018 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீரவசந்தராயர் மண்டபப் பகுதியில் உள்ள கடைகளை வெள்ளிக்கிழமை (பிப். 9) பகல் 12 மணிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
  கடைகளை காலி செய்வதற்கான கோயில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்குத் தடை கோரிய மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
  மதுரை மீனாட்சியம்மன் கோயில் கடைக்காரர்கள் சங்கத் தலைவர் ராஜூநாகுலு தாக்கல் செய்த மனு: மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் மஞ்சள், குங்குமம், பூஜை பொருள்கள், செயற்கை நகைகள், ஆன்மிக புத்தகங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகள் 115-ம், மலர்கள், பூ மாலைகள் விற்பனை செய்யும் கடைகள் 22-ம் உள்ளன. கடைகளுக்கு கோயில் நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று பல ஆண்டுகளாக நடத்தி வருவதுடன் முறையான வாடகையையும் செலுத்தி வருகிறோம். 
  ஆனால் வாடகை வசூலிக்கும் கோயில் நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவது இல்லை. ஒட்டுமொத்த கோயிலுக்கும் ஒரே ஒரு இரவுக் காவலாளி, எலக்ட்ரீசியன் ஆகியோர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிப். 2-ஆம் தேதி கோயிலில் உள்ள கடை எண் 72-இல் இரவு 10.20 மணியளவில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 19 கடைகள் எரிந்து சேதமடைந்தன. கடை உரிமையாளர்கள் எடுத்த துரித நடவடிக்கையால் அதிக கடைகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.
  கோயிலில் தீ விபத்து நடந்த போது மின் இணைப்பு துண்டிக்கப்பட வில்லை. மேலும் விபத்தின் போது எலக்ட்ரீசியன் சம்பவ இடத்தில் இல்லை. தீ விபத்துக்கு கோயில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம். கோயிலில் நடந்த தீ விபத்தால் ஆத்திரமடைந்த பக்தர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், கோயில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் இருந்து தப்பிப்பதற்காக தீ விபத்துக்கு கோயில் கடைகள் தான் காரணம் என்று காட்டி, அவற்றை காலி செய்யும் நடவடிக்கையில் கோயில் நிர்வாகம் இறங்கி உள்ளது. கோயிலில் உள்ள கடைகளை வைத்துதான் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பிழைத்து வருகின்றன. எனவே கடைகளை காலி செய்யும் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
  இந்த மனு, நீதிபதி வி.பாரதிதாசன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
  அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 115 கடைகளையும் அகற்ற முடிவு செய்து உள்ளோம். இதில் வீரவசந்தராயர் மண்டபம் பகுதியில் உள்ள கடைகளில் தீ விபத்தில் எரிந்தது போக உள்ள இதர 22 கடைகளை உடனடியாக காலி செய்யுமாறு கடைக்காரர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  அந்த கடைகளை காலி செய்தால் மட்டுமே மண்டபத்தை சீரமைக்கும் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியும் என்றார். மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், கடைகளை அகற்ற காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றார். 
  அதற்கு அரசு வழக்குரைஞர், காலஅவகாசம் வழங்கினால் வீரவசந்தராயர் மண்டபத்தின் இடிந்த பகுதிகளை அப்புறப்படுத்துவது, இரும்புத் தூண்களால் முட்டு கொடுப்பது போன்ற பணிகள் செய்ய முடியாது என்றார்.
  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வீரவசந்தராயர் மண்டப பகுதியில் அமைந்துள்ள 22 கடைகளின் பொருள்களையும் வைக்க வேறு இடத்தை கோயில் நிர்வாகம் தேர்வு செய்து தர வேண்டும். 22 கடைக்காரர்களும் தங்கள் கடைகளை வெள்ளிக்கிழமை (பிப். 9) பகல் 12 மணிக்குள் காலி செய்து பொருள்களை கோயில் நிர்வாகம் வழங்கிய இடத்தில் வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து 3 வாரங்களுக்குள் கடை உரிமையாளர்கள் தங்களது பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai