
சென்னையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளரிடம் விசாரணை மேற்கொள்ள, தேசியப் புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) 3 நாள்கள் அனுமதி அளித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் அன்சாரிடம் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளரான அன்சார்மீரானை, என்ஐஏ அதிகாரிகள் சென்னையில் திங்கள்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
விசாரணை தொடங்கியது: இதைத்தொடர்ந்து, அன்சாரிடம் விசாரணை செய்வதற்கு 7 நாள்கள் அனுமதி கோரி, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டியன், அன்சாரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்வதற்கு 3 நாள்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையின்போது புழல் சிறையில் இருந்த அன்சார் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக, என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள், ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். முகாமில் வைத்து அன்சாரிடம் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.