Enable Javscript for better performance
ரஜினியின் 20 ஆண்டுகால அரசியல்!- Dinamani

சுடச்சுட

  
  rajini

  நடிகர் ரஜினிகாந்த் 1996-ஆம் ஆண்டு திமுக - தமாகா கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தன் மூலம் அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தவர். அப்போதே அவரது மறைமுக அரசியல் பயணம் தொடங்கிவிட்டது என்கின்றனர் அவரது ரசிகர்கள்.
   1996 தேர்தலின்போது ரஜினிகாந்த் எடுத்த முடிவின் காரணமாக, அதிமுக கடும் தோல்வியைச் சந்தித்தது. அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக ரஜினி உருவெடுத்ததும் அப்போதுதான்.
   1991- ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ரஜினியின் வாகனத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுவே அதிமுக மீதான தனது எதிர்ப்பை ரஜினி பதிவு செய்யக் காரணமாக அமைந்ததாக இன்றளவும் அவருக்கு நெருங்கிய வடடாரங்கள் கூறுகின்றன.
   வெடிகுண்டு கலாசாரம்: 1992- ஆம் ஆண்டு 'அண்ணாமலை' திரைப்படம் வெளியான நேரத்தில், திரைப்படங்களுக்கான போஸ்டர்கள் ஒட்டுவதற்கு எதிராக அப்போதைய ஜெயலலிதா அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தது. கூடவே, படத்தில் இடம்பெற்ற அரசியல் வசனங்கள் அனல் பறந்தது. அன்று முதலே தன் படங்களில் அரசியல் வசனங்களை வைப்பதற்கு ஆர்வமாக இருந்தார் ரஜினி.
   அதே போல் 1995- ஆம் ஆண்டு இயக்குநர்கள் மணிரத்னம் அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை பற்றி, பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினி, 'தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவத் தொடங்கிய அறிகுறியே இது' என்று கூறினார். அப்போது அதிமுக அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன், அந்த விழாவில் கலந்துகொண்டது ஜெயலலிதாவுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் ஆர்.எம்.வீரப்பன் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதுவும் ரஜினிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
   அதைத் தொடர்ந்து செவாலியர்' விருது பெற்ற நடிகர் சிவாஜி கணேசனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அந்தச் சமயம், புதிதாய் தொடங்கப்பட்ட திரைப்பட நகருக்கு "ஜெ. ஜெ. திரைப்பட நகர்' என்று பெயர் வைத்திருந்தனர். அவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த், "புதிதாகத் திறக்கப்பட்ட இந்த நகருக்கு எம்ஜிஆர் அல்லது சிவாஜி நகர் என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும்' என்றார். அந்த விழாவில் கலந்துகொண்ட ஜெயலலிதாவுக்கு ரஜினியின் இந்தப் பேச்சு கோபத்தை ஏற்படுத்தியது.
   கோவை குண்டு வெடிப்பு: 1998- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கோவையில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. அப்பொழுது ஆளும் திமுக அரசை ஆதரித்துப் பேசிய ரஜினி, "நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பில் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்டிருக்க முடியாது' என்று கூறினார். இது பாஜக மற்றும் பிற இந்து அமைப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
   காவிரிக்கு 1 கோடி: 2002-ஆம் ஆண்டு பாபா படத்தில் ரஜினி சிகரெட் பிடித்துள்ள காட்சிகள் இடம்பெறுகிறது என்ற எதிர்ப்பைப் பயன்படுத்தி பாமக பட வெளியீட்டை நிறுத்த முயன்றது.
   காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ் திரையுலகம் நெய்வேலியில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் போராட்டத்தை நடத்தியது. அதில் ரஜினி கலந்துகொள்ளாமல், அடுத்த நாள் சென்னையில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டார். "நதி நீர் ஒருங்கிணைப்பு மட்டுமே தீர்வாகும், பணம் இல்லையென்று அரசு இனியும் காலம் தாழ்த்த வேண்டாம், முதல் ஆளாக நானே ரூ.1 கோடி தருகிறேன்' என்று உண்ணாவிரத மேடையில் கூறினார்.
   2004- ஆம் ஆண்டு தேர்தலில் பாமகவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்தக் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தனது ரசிகர்களை வேலை செய்ய உத்தரவிட்டார் ரஜினி. அப்போது பாமக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனால் 1996-இல் எடுபட்ட ரஜினி வாய்ஸ் இத்தேர்தலில் எடுபடாமல் போனது என்கிற விமர்சனம் எழுந்தது.
   2008- ஆம் ஆண்டு ஒகேனக்கல் திட்டத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி கொண்டுவந்தார். அதற்கு கன்னடர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அப்போது, 'தமிழ்நாடு, கர்நாடகா எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், சத்தியம் பேசுங்க... உண்மையைப் பேசுங்க... நம்ம இடத்துல தண்ணீர் எடுக்க அவங்க தடுத்தாங்கன்னா, அவங்கள உதைக்க வேண்டாமா?' என்று ரஜினி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
   2009- ஆம் ஆண்டு ஈழ இனப்படுகொலையைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில், "35 ஆண்டுகளாக தமிழர்களை உங்களால ஒழிக்க முடியலைன்னா நீங்க என்ன வீரர்கள்? ஆம்பிளைகளா நீங்கள்?' என்று இலங்கை அரசை மிகக்கடுமையாக விமர்சித்தார்.
   அதிமுகவுக்கு ஓட்டு போட்ட ரஜினி: 2011-ஆம் ஆண்டு தேர்தலில் ரஜினி அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டார் என்று பத்திரிகையில் செய்தி வெளியானது. அன்று மாலையே 'பொன்னர் சங்கர்' திரைப்படத்தை கருணாநிதியுடன் பார்த்தார். அப்பொழுது அரசியல் பற்றி எதுவும் அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை என்று கூறப்பட்டது.
   என் கையில் எதுவும் இல்லை: 2012-ஆம் ஆண்டு உடல்நிலை சரியாகி ரசிகர்களை சந்தித்தார். "நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன், நான் மருத்துவமனையில் இருந்தபோது ரசிகர்களின் பிரார்த்தனைகளை அறிந்தேன். நான் நலம் பெறுவதற்கு இதுவே காரணம். இதற்கு நன்றி என்று சொல்ல முடியாது. ஏதாவது செய்ய வேண்டும், ஆனால், அது என் கையில் இல்லை ' என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
   2017- ஆம் ஆண்டு எந்திரன் 2-ஆம் பாகமான "2.0'-ன் தயாரிப்பு நிறுவனமான "லைக்கா', தனது "ஞானம்' அறக்கட்டளையின் மூலம் இலங்கையில் கட்டப்பட்டுள்ள 150 வீடுகளை ரஜினி முன்னிலையில் தமிழர்களுக்கு வழங்கத் தயாராக இருந்தது. தமிழகத்தில் இதற்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், அப்பயணத்தைக் கைவிட்டார் ரஜினிகாந்த். மீண்டும் இலங்கை சென்றால், "மீனவர் பிரச்னை' குறித்து இலங்கை அதிபர் சிறிசேனாவிடம் பேசுவதாக' அப்போது கூறினார்.
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai