தொழிலாளியின் மூச்சுக் குழாயில் சிக்கிய இரும்பு நட்டு அகற்றம்
By DIN | Published on : 10th July 2018 10:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மூச்சுக் குழாயில் சிக்கிய இரும்பு நட்டு அகற்றப்பட்ட நோயாளி ஜோஜப்பா. உடன் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி.
தொழிலாளியின் மூச்சுக் குழாயில் சிக்கிய இரும்பு நட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த பிளம்பர் ஜோஜப்பா (54). இவர் குழாய் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது 2 செ.மீ. அளவுள்ள இரும்பு நட்டை தனது வாயில் வைத்திருந்தார். அப்போது அவருடன் ஒருவர் பேச்சுக்கொடுத்துள்ளார்.
வாயில் உள்ள நட்டை எடுக்காமலேயே அவர் பேச முயற்சித்தபோது நட்டை விழுங்கிவிட்டார். அது மூச்சுக்குழாயினுள் சென்றதால் மூச்சு விடுவதில் சிரமப்பட்டதோடு, வறட்டு இருமல் ஏற்பட்டு அவதிப்பட்டார். அருகிலுள்ள இரண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார். ஆனால், நட்டை மூச்சுக்குழாயில் இருந்து எடுக்க இயவில்லை.
இதனைத் தொடர்ந்து நட்டை விழுங்கிய இரண்டு நாள்களுக்குப் பிறகு அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் மூச்சுக்குழாயில் சிக்கிய நட்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி, காது - மூக்கு - தொண்டை துறையின் பேராசிரியர் ஆர்.முத்துக்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: பிரான்கோஸ்கோப்பி' என்ற முனையில் கேமரா பொருத்தப்பட்ட கருவியின் மூலம் அவரது வலது மூச்சுக்குழாயில் நட்டு சிக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனை அகற்ற முயற்சிக்கும்போது அங்கிருந்து நகர்ந்த நட்டு, குரல்வளையில் சிக்கியது. இதனையடுத்து டிரக்யாஸ்டமி' எனப்படும் தொண்டையில் சிறு துளை போடும் சிகிச்சை மேற்கொண்டு, அந்தத் துளை வழியாக நட்டு வெளியே எடுக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சை முடிந்து மூன்று நாள்களுக்குப் பிறகு தொண்டையில் உள்ள துளை அடைக்கப்பட்டு நோயாளி தற்போது நலமுடன் உள்ளார் என்று தெரிவித்தனர்.