கும்பகோணத்துக்கு கொண்டு செல்லப்பட்டது பழனி கோயில் அபிஷேகமூர்த்தி சிலை
By DIN | Published on : 12th July 2018 01:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பழனி மலைக்கோயில் அபிஷேக மூர்த்தி சிலையின் எடையை புதன்கிழமை சரிபார்த்த கோயில் இணை ஆணையர் செல்வராஜ், சிலைக் கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி., ராஜாராம், டி.எஸ்.பி., வெங்கட்ராமன்,
பழனி மலைக்கோயிலில் மூலவர் சிலை முன் வைக்கப்பட்ட அபிஷேக மூர்த்தி சிலையை, சிலை கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸார், கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை கொண்டு சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு மூலவர் தண்டாயுதபாணி சிலை முன், மூலவரை மறைக்கும் வகையில் சுமார் மூன்றரை அடி உயர ஐம்பொன்னாலான அபிஷேக மூர்த்தி சிலை நிறுவப்பட்டது. பக்தர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த சிலை அகற்றப்பட்டது. இரட்டைப்பூட்டு அறையில் வைக்கப்பட்ட இந்த சிலைக்கு ஒருகால பூஜை மட்டும் நடைபெற்று வந்த நிலையில் சிலை தயாரிப்பில் நான்கு உலோகம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்துள்ளதையும் சிலை கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக கோயிலின் முன்னாள் இணை ஆணையர் கே.கே. ராஜா, ஸ்தபதி முத்தையா, உதவி ஆணையர் புகழேந்தி, நகை சரிபார்ப்பு அலுவலர் தேவேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பழனிக்கோயில் தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து நான்கு உலோகத்தாலான சிலைக்கு பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் எனக்கருதிய சிலை கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸார் சிலையை தங்கள் பொறுப்புக்கு கொண்டு செல்ல நீதிமன்ற உத்தரவு பெற்றனர்.
அதையடுத்து அபிஷேக மூர்த்தி சிலையை கும்பகோணம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல ஏடிஎஸ்பி., ராஜாராம், டிஎஸ்பி., வெங்கட்ராமன், ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை பழனி வந்தனர்.
சிலையை வெளியூர் கொண்டு செல்லும் பொருட்டு மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் சிறப்பு யாகபூஜை நடத்தப்பட்டு, கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை, நைவேத்தியம் காட்டப்பட்டு பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர், சாயரட்சையின்போது இரட்டை பூட்டு அறையில் இருந்த அபிஷேக மூர்த்தி சிலை வைக்கோலால், தெர்மாகோல் சுற்றப்பட்டு பெரிய மரப்பெட்டியில் வைக்கப்பட்டது. புதன்கிழமை காலை ஏழு மணியளவில் சிலை வெளியே எடுத்து தராசில் எடை பார்க்கப்பட்டது. பின்னர், மீண்டும் பெட்டியில் வைத்து இழுவை ரயில் மூலம் அடிவாரம் கொண்டு வரப்பட்டது.
அதைத்தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் வட்டாட்சியர் சரவணன் முன்னிலையில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார் ஆகியோர் சிலையை சிலைக்கடத்தல் மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். பின்னர் சிலை மீண்டும் எடை பார்க்கப்பட்டு பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் கொண்டு செல்லப்பட்டது. சிலை 221 கிலோ எடையும் 111 செ.மீ உயரமும் உள்ளது.