கன மழையால் அதிக நீர்வரத்து: சோலையாறு அணை திறப்பு

இடைவிடாது தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அபரிமிதமாக அதிகரித்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி அளவில் நீர்மட்டம் 164.55 அடியாக
நிரம்பிய நிலையில் கடல்போல காட்சி அளிக்கும் சோலையாறு அணை. 
நிரம்பிய நிலையில் கடல்போல காட்சி அளிக்கும் சோலையாறு அணை. 

இடைவிடாது தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அபரிமிதமாக அதிகரித்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி அளவில் நீர்மட்டம் 164.55 அடியாக உயர்ந்தது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் திறக்கப்பட்டு 679.98 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்துள்ளது சோலையாறு அணை. ஆசியாவிலேயே முற்றிலும் கற்களால் கட்டப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய கல் அணை இது. மொத்தம் 160 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து சோலையாறு மின் நிலையம் 1 மற்றும் மின் நிலையம் 2 என இரண்டு மின் நிலையங்களுக்கு நீர் வெளியேற்றப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது மின் நிலையம் 1இல் உற்பத்தித் திறனை அதிகரிக்கப் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மின் நிலையத்துக்கு நீர் வெளியேற்றப்படுவதில்லை. 
சோலையாறு அணையின் சேடல்டேம் வழியாகப் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்படும் நீரால் சமவெளிப் பகுதியில் லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆழியாறு- பரம்பிக்குளம் நீர்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக விளங்குகிறது சோலையாறு அணை. 
வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 4 வருடங்களாகப் போதுமான மழை பெய்யாததால் சோலையாறு அணை ஒரு முறை கூட நிரம்பவில்லை. இந்நிலையில், கடந்த 45 நாள்களாகத் தொடர்ந்து பெய்த மழையால் கடந்த 1-ஆம் தேதி சோலையாறு அணை 160 அடியை எட்டி நிரம்பியது. அணையில் இருந்து பைபாஸ் வழியாக பரம்பிக்குளம் அணை மற்றும் மின் நிலையம் 2க்கு நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை சேடல்டேம் வழியாகவும் பரம்பிக்குளத்திற்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தொடர்ந்து இடைவிடாது கன மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து கொண்டே வந்தது. இதனால் பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதைக் கண்காணித்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை அணைக்கு 7855.32 கனஅடி நீர்வரத்தாக இருந்து. அணையில் இருந்து பைபாஸ் வழியாக 925.35 கனஅடியும், மின் நிலையம் 2க்கு 622.92 கன அடியும், சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு 4389.98 கன அடியும் நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையிலும் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 164.55 அடியாக உயர்ந்தது. அணையின் பாதுகாப்புக் கருதி பொதுப் பணித் துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் அணையின் மூன்று மதகுகள் திறக்கப்பட்டு 679.98 கனஅடி உபரி நீர்வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் கேரள வனப் பகுதி வழியாகக் கடலுக்குச் செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com