நடத்துநர் இல்லாத பேருந்துகள்: அரசு பதிலளிக்க உத்தரவு
By DIN | Published on : 13th July 2018 02:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நடத்துநர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மோட்டார் வாகன சட்டத்தின்படி பயணிகள் பேருந்துகளில் நடத்துநர் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் நடத்துநர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நடைமுறையை விரிவுபடுத்தி பணியாளர்களைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பொதுவாக பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்படுவதைத் தடுப்பது, பேருந்துகளைச் சுத்தமாகப் பராமரிப்பது உள்ளிட்ட பொறுப்புகள் நடத்துநருக்கு உரியது.
இந்த நிலையில் நடத்துநரே இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுவது மோட்டார் வாகனச் சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே, இந்த நடைமுறையைத் தடுக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. நடத்துநர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்பது குறித்துப் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 18 -ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.