ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் பிருந்தாவன பிரவேசம்
By DIN | Published on : 13th July 2018 11:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருநாடு அடைந்த ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள். (வலது) பிருந்தாவன பிரவேசத்தில் பங்கேற்ற ஜீயர்கள், அமைச்சர்கள் மற்றும் பக்தர்கள்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீராமானுஜ மடத்தின் 50-ஆவது பட்டம் ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகளின் பிருந்தாவன பிரவேசம் வியாழக்கிழமை நடைபெற்றது. உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜீயர் சுவாமிகள், புதன்கிழமை மாலை திருநாடு அலங்கரித்தார். இதையடுத்து ஜீயர் சுவாமிகளுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், ஸ்ரீரங்கம் வடக்கு கோபுர வாசல் பகுதியில் உள்ள மடத்தின் வளாகத்தில் மேடை அமைத்து சுவாமிகளுக்கு மாலை அணிவித்து ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
வியாழக்கிழமை காலை மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில்
ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர், கொங்குமண்டலம், குழல் ஆயர்பீடம், கிருஷ்ண மடத்தின் ஸ்ரீ நாராயண ராமானுஜ ஜீயர், திருக்குறுங்குடி ஸ்ரீமத் பேரருளாள ராமானுஜ ஜீயர், பண்டரிபுரம் ஜீயர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பிருந்தாவன பிரவேசத்தின் தொடக்கமாக ஜீயரின் திருவுடலுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு திருவுடல் அலங்கரிக்கப்பட்டு பிரம்ம ரதம் உத்திர வீதிகளில் எடுத்து வரப்பட்டது. அதன் பின்னால், யானை, குதிரை அழைத்துச் செல்லப்பட்டன.
பின்னர், ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் உள்ள உடையவர் தோப்பு, ஆளவந்தார் படித்துறை அருகே அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் (ஜீயர் திருவரசு) பிருந்தாவன பிரவேசம் தொடங்கியது. மூங்கில் கூடையில் மாலைகள் இட்டு நிரப்பி அதன் மீது ஜீயரின் திருவுடலை வைத்து தீபாராதனை நடைபெற்றது.
ஜீயர் பயன்படுத்திய திருத்தண்டம் உள்ளிட்ட பொருள்கள் திருப்புக்குழியில் வைக்கப்பட்டன. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க 6-க்கு 6 அடி அகலம், 8 அடி ஆழமுள்ள குழியில் ஜீயரின் திருவுடல் மூங்கில் கூடையுடன் வைக்கப்பட்டு பிருந்தாவன பிரவேசம் நடந்தேறியது. ஜீயரின் மகன்களான திருமலை, நாராயணன் ஆகியோர் கைங்கர்யங்களை செய்தனர்.
பல்வேறு திவ்ய பிரதேசங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும், பிருந்தாவனத்தில் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகளை தரிசித்து சென்றனர்.
முக்கிய பிரமுகர்கள்: தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி, பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு. பரஞ்ஜோதி, ப. மோகன், எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலர்கள் ஆர். மனோகரன், ஜெ. சீனிவாசன், அரங்கநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர் குழுத் தலைவர் வேணுசீனிவாசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
வைணவ உலகத்துக்கு பேரிழப்பு'
மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயர் கூறியது: ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் பரமபதம் அடைந்திருப்பது வைணவ உலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். ஸ்ரீரங்கத்தில் ஜாதி, மத பேதமில்லாமல் தலைமை பீடத்தை அலங்கரித்து பணியாற்றி வந்தவர். ஸ்ரீராமானுஜரின் வழியில் வைணவ உலகுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். எனக்கு செண்டலங்கார பட்டத்தை வழங்கியவர். வைணவ மடத்துக்கெல்லாம் தலைமை மடாதிபதியாக இருந்து ஆன்மிகப் பணியாற்றியவர். தோஷமும், வேஷமும் இல்லாமல், அரசியலுக்கு ஆள்படாது தைரியமாக முடிவெடுத்து அதன் வழியில் தொடர்ந்து அனைவரையும் அரவணைத்து பாகவத கைங்கர்யம் செய்த பெருமையுடையவர் என்றார் அவர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் கூறியது: வைணவ ஜீயர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய மகானாகத் திகழ்ந்தவர். ஸ்ரீராமானுஜர் பீடத்தின் அடுத்தநிலையிலிருந்து பாகவத கைங்கர்யம் செய்தவர். வைணவ உலகின் மகா விருட்சம் சாய்ந்தது. உலக மக்கள் அனைவரது உள்ளங்களிலும் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் வீற்றிருந்து மங்களாசாசனம் செய்துகொண்டே இருப்பார் என்றார்.
முதல்வர் இரங்கல்
ஸ்ரீரங்கம் ஜீயர் திருநாடு அலங்கரித்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் 50 -வது ஜீயராக இருந்த
ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் உடல்நலக் குறைவால் புதன்கிழமை திருநாடு அலங்கரித்தார். இந்தச் செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், கோவை ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அர்ச்சகராக தமது ஆன்மிகப் பணியை தொடங்கி, 60 -வது வயதில் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் 50 -வது ஜீயராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார்.
அவரை இழந்து வாடும் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் சிஷ்யர்கள், ஆன்மிக அன்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் முதல்வர்
தெரிவித்துள்ளார்.