18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என தினகரன் தரப்பு வாதம்

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் 3-ஆவது நீதிபதி விசாரணையில், "அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காததே எங்களது முதல் குற்றச்சாட்டு" என தினகரன் தரப்பு வாதம் வைத்தது. 
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் என தினகரன் தரப்பு வாதம்

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் 3-ஆவது நீதிபதி விசாரணையில், "அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காததே எங்களது முதல் குற்றச்சாட்டு" என தினகரன் தரப்பு வாதம் வைத்தது. 

18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 3-ஆவது நீதிபதியின் விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த வழக்கு மீதான விசாரணை திங்கள்கிழமை முதல் வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறும் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்தார். இதையடுத்து, முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. 

அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் தரப்பு 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் வழக்கறிஞர் ராமன் வாதாடினார். அப்போது, 

"எங்களது முதல் அதிருப்தி ஓ.பன்னீர்செல்வம் மீது தான். முதல்வர் மீது இல்லை. 

கொறடாவின் உத்தரவை மீறி ஆளும் அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்று நாங்கள் ஒருபோதும் சொன்னது இல்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததே எங்களது முதல் குற்றச்சாட்டு. முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பது எங்களுக்கு இரண்டாவது பட்சம் தான். 

தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகிறோம் என்று முதல்வர் சொல்லவில்லை. சபாநாயகர் தான் அதனை கூறுகிறார். திமுகவுடன் கைகோர்த்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்கிறோம் என்றும் சபாநாயகர் தான் கூறினார். ஆளுநரை நாங்கள் சந்தித்த அதே தினம் திமுகவும் ஆளுநரை சந்தித்தற்கு நாங்கள் பொறுப்பாகாது" என வாதங்களை முன்வைத்தார். 

இதையடுத்து, இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு நீதிபதி சத்யநாராயணன் உத்தரவிட்டார். 

வழக்கு பின்னணி:

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக்கூறி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.

இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தது. இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.
 
இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் கடந்த 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோரும், சட்டப்பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் சார்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு வழக்குரைஞர் டி.என்.ராஜகோபாலன், அரசு சிறப்பு வழக்குரைஞர் திருமாறன் ஆகியோரும் ஆஜராகினர். மேலும் இந்த வழக்கில் இரு தரப்பிலும் தில்லியிலிருந்து மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் ஏதேனும் தாக்கல் செய்ய உள்ளீர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், இந்த வழக்கில் மேலும் சில ஆவணங்களைக் கூடுதலாக தாக்கல் செய்யப் போவதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து நீதிபதி, இரண்டு தரப்பிலும் மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதிட உள்ளனர்.

தொடர்ந்து 5 நாள்கள்... எனவே, கூடுதல் விவரங்கள் குறித்து மட்டும் வாதிட்டால் போதுமானதாக இருக்கும் . இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை (ஜூலை 23) முதல் வெள்ளிக்கிழமை ( ஜூலை 27) வரை தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறும் என உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து 18 எம்.எல்.ஏ.-க்களின் தகுதி நீக்க வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com