குமரியில் தொடர் மழை: அணைப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
முழுகொள்ளளவை எட்டும் நிலையில் கடல்போல் காட்சியளிக்கும் பெருஞ்சாணி அணை.
முழுகொள்ளளவை எட்டும் நிலையில் கடல்போல் காட்சியளிக்கும் பெருஞ்சாணி அணை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெருஞ்சாணி அணை உள்ளிட்ட 4 அணைகளின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக மலையோரங்கள், அணைப்பகுதியில் பெய்த மழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்திருந்தது. கடந்த 4 நாள்களாக குமரி மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை உள்
வரத்தாக வந்தது.
பேச்சிப்பாறை அணையில் சீரமைப்புப் பணி நடைபெறுவதால் அதிக நீர் தேக்க முடியாத நிலை உள்ளது. ஆனாலும் பேச்சிப்பாறை நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 13 அடியை எட்டியது. அணைக்கு உள்வரத்தாக 1238 கனஅடி வரும் நிலையில் 812 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று 71.50 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 1838 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டத்தை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த பொதுப்பணித்துறையினர் அணைக்கு இதே அளவு தண்ணீர் உள்வரத்தாக வந்தால் இன்னும் 4 நாள்களுக்குள் அணை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பெருஞ்சாணி அணையை ஒட்டிய கரையோரப் பகுதி மக்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
இதுகுறித்து பொதுப்பணித்துறை நீர்ஆதார செயற்பொறியாளர் வேதஅருள் சேகர் கூறியது: பாலமோர் மற்றும் மலை பகுதிகளில் பெய்யும் மழை, அணைகள் பெருகுவதற்கு கைகொடுத்து வருகிறது. அணைகளில் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டுவதற்கு 6 அடி தேவை என்ற நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
அதன்படி, 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 71 அடியை தாண்டியுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணை 12 அடியை எட்டியபோது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
1800 கனஅடிக்கு மேல் பெருஞ்சாணி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கும் வேளையில், கனமழை தொடர்ந்தால் திடீரென முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. 75 அடியை தாண்டியதும் உபரிநீர் திறந்துவிடப்படும்.
பேச்சிப்பாறை அணை 13 அடி வரை உயர்ந்துள்ள நிலையில் சீரமைப்பு பணியால் மேலும் நீர்தேக்குவதற்கான வாய்ப்பில்லை. எனவே, உள்வரத்து தண்ணீரை உபரியாக வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர். 
குளங்கள் உடையும் அபாயம்: மாம்பழத்துறையாறு அணையும் தனது முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டியுள்ளதால், அதற்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2, மாம்பழத்துறையாறு ஆகிய 4 அணைகளும் வெள்ள அபாய எச்சரிக்கை நிலையில் உள்ளன. குமரி மாவட்டத்தில் அச்சன்குளம், புத்தேரி உள்பட பல குளங்களில் மறுகால் பாய்ந்து கரைபகுதிகள் உடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் நீர்நிலைகளை ஆய்வு செய்து வருகின்றனர். குமரி மாவட்ட மலையோர பகுதிகளில் மழையின் தாக்கத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக சிற்றாறு 2 அணைப்பகுதியில் 14 மி.மீ. மழை பெய்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com