சுடச்சுட

  

  தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஆட்சி எது?: திமுக - அதிமுக விவாதம்

  By DIN  |   Published on : 14th June 2018 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஆட்சி யாருடையது என்பது குறித்து திமுக -அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
  சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் எம்.பி.கிரி பேசும்போது, தமிழ் வளர்ச்சிக்காக திமுக ஆட்சியில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடியை திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் வழங்கினார் எனவும் கூறினார்.
  அப்போது தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியது: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் முதலில் அறிவித்தவர் ஜெயலலிதா. அரசு சார்பில் நிதி திரட்டப்பட்டு தமிழ் இருக்கை அமைப்பதற்கான 6 மில்லியன் டாலர் நிதி திரண்டு விடும் என்ற நிலையில்தான் கடைசியாக ரூ.1 கோடியை ஸ்டாலின் தர முன் வந்தார் என்றார். அதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: தமிழ் வளர்ச்சிக்காக அதிமுகவும், திமுகவும் சிறப்புச் செய்துள்ளன என்பது யதார்த்தம். 5-ஆம் உலகத் தமிழ் மாநாட்டையும் எம்ஜிஆரும், 8-ஆம் உலகத் தமிழ் மாநாட்டை ஜெயலலிதாவும் நடத்திக் காட்டினர். இந்த மாநாட்டின்போது முத்தமிழ் என்பதை நான்காம் தமிழாக அறிவியல் தமிழ் வளர்க்க வேண்டும் என்று அறிவித்து, வளர்த்துக் காட்டியவர் ஜெயலலிதா. ஆனால், திமுக ஆட்சியில் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ரூ.10 லட்சம் கேட்டபோது தரப்படவில்லை. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.50 லட்சம் அளித்து தமிழ் இருக்கை அமைக்கப்பட்டது.
  அமைச்சர் பாண்டியராஜன்: செம்மொழி தகுதி பெற்றுக் கொடுத்ததைப் பற்றிக் குறிப்பிட்டார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது மூலம் உலக அளவில் செம்மொழி தகுதி அடைவதற்கு முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்தது என்பதை மறுத்துவிட முடியாது. 
  தங்கம் தென்னரசு (திமுக): திமுக ஆட்சியில் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. அதுபோல அதிமுக ஆட்சியில் செய்யாதது ஏன்? அறிவியல் தமிழைக் கொண்டு வந்ததாகக் கூறினார். பள்ளிகளில் தமிழ்க் கட்டாயம் என்று அறிவித்தவர் கருணாநிதி. எனவே, தமிழுக்காக அதிமுக பாடுபட்டதுபோல கூறுவது வேடிக்கையாக உள்ளது.
  அமைச்சர் பாண்டியராஜன்: நாட்டுடமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல் விவரம் வெளியிடப்படும்.
  தங்கம் தென்னரசு: தற்போது, தமிழ் வழிக் கல்வி முறையைக் கைவிட்டு ஆங்கில வழி முறையைப் புகுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதுதான் தமிழை வளர்க்கும் முறையா?
  அமைச்சர் செங்கோட்டையன்: திமுக உறுப்பினர் காலத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் மனநிலைக்கேற்பதான் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  அமைச்சர் பாண்டியராஜன்: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற பாடத்திட்டங்களிலும் தமிழ் பாடம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்தவர்கள் ஜெயலலிதா. இதை ஏன் திமுக ஆட்சியிலேயே செய்யவில்லை என்று கூறி மாறிமாறி விவாதங்களில் ஈடுபட்டனர்.
  அப்போது பேரவைத் தலைவர் தமிழோடு விளையாடியதுபோதும், அத்தோடு விவாதத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்றார். எனினும், விவாதம் முடிவுக்கு வரவில்லை. அவரவர் ஆட்சியில் செய்ததைப் பட்டியலிட்டுப் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai