சுடச்சுட

  

  ஒரு தீர்ப்பு.. ஒரு மாநிலத்தின் எதிர்காலம்... தாமதத்தின் விளைவுகள் அலட்சியமா?

  By DIN  |   Published on : 14th June 2018 05:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Madras High Court

   

  கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர். அவர்கள், உச்சநீதிமன்றத்தின் நிர்வாக செயல்பாடுகள் சரியாக இல்லை, உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்று குற்றம் சாட்டினர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களைச் சந்திப்பது அதுவும் உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்று கூறுவது இந்திய வரலாற்றிலேயே முதன்முறை.

  இந்த நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி செல்லமேஸ்வர் கடந்த ஏப்ரல் மாதம் தில்லியில் 'ஜனநாயகத்தில் நீதித்துறையின் பங்கு' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது, பத்திரிகையாளர் கரண் தாப்பர் நடத்திய உரையாடலில் பேசிய போது முக்கியமான விஷயங்கள் குறித்து பேசினார். 

  அதில் மிக முக்கியமான ஒன்று ஜெயலலிதா தீர்ப்பு குறித்து அவர் பேசியது. கர்நாடக நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பு வந்தது. இந்த வழக்கு மேல்முறையீட்டுக்காக உச்சநீதிமன்றம் சென்றது. 

  அது குறித்து அவர் கூறியது, "ஜெயலலிதாவின் அந்த வழக்கு குறிப்பிட்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதற்கான தீர்ப்பு எழுதியும் சுமார் 1 ஆண்டு வெளியிடவில்லை. ஜெயலலிதா இறந்தபின் தீர்ப்பு வழங்கியதால் என்ன பயன்?" என்றார். 

  அவர் கூறியதை அடிப்படையாக வைத்தால், 

  ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மே 11, 2015 தீர்ப்பு வந்தது. இந்த வழக்கை கர்நாடக அரசு ஜூன் 23, 2015 உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு அனுப்பியது.

  ஆனால், இந்த வழக்கின் தீர்ப்பு ஓராண்டுக்கு மேல் தான் வந்தது. இந்த ஓராண்டு இடைக்காலத்தில் தான் ஜெயலலிதா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் பதவியேற்றார். 

  ஒருவேளை இந்த வழக்குக்கான தீர்ப்பை உச்சநீதிமன்றம் முன்னதாகவே வழங்கியிருந்தால் மே 15, 2016 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவால் போட்டியிட்டிருக்கவே முடியாது. அவர் ஆட்சியில் அமர்ந்திருக்கவே முடியாது. அல்லது, அவர் பதவியேற்ற பிறகு தீர்ப்பு வந்திருந்தாலும் முதல்வர் பதவியை அவர் ராஜிநாமா செய்திருக்க வேண்டும். அந்த ஒற்றை தீர்ப்பு தமிழகத்தின் வரலாற்றையே மாற்றி அமைத்துள்ளது. 

  அதற்கு ஓர் உதாரணம், தமிழகத்தில் நீட் வராமல் கூட இருந்திருக்கலாம். 

  அந்த தீர்ப்பு ஜெயலலிதா இறந்தபிறகு தான் வெளியானது. அதுவும் ஜெயலலிதாவுக்கு அடுத்த அதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சசிகலா அடுத்த முதல்வராக ஆயத்தமாகக் கொண்டிருந்த சமயம் இந்த தீர்ப்பு வெளியாகி தமிழகத்தின் தலையெழுத்தை மீண்டும் மாற்றியது.

  ஒரு தீர்ப்பை சரியாக விசாரித்து வழங்கும் நீதித்துறைக்கு வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தகுந்த நேரத்துக்கான முக்கியத்துவம் குறித்து அறியாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. 

  இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தின் 18 தகுதி நீக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் தீர்ப்பும் இது போன்று தமிழகத்தின் வரலாற்றை மாற்றக்கூடிய ஒன்று. இந்த வழக்குக்கான விசாரணை முடிந்து 130 நாட்கள் கழித்து இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இன்று வெளியாகிய இறுதித்தீர்ப்பில் 2 நீதிபதிகளும் இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால் 3-ஆவது நீதிபதிக்கு மாற்றப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

  அந்த 3-ஆவது நீதிபதியை தலைமை நீதிபதி அல்லாமல் வேறு நீதிபதிதான் தீர்மானிக்க வேண்டும். அதன்பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு என்றால் இந்த வழக்கு எப்போது முடிவுக்கு வரும். 

  இதுவும் தமிழகத்தின் எதிர்காலத்தை நோக்கி இருக்கும் ஒரு மிக முக்கியமான வழக்கு தான். இடைத்தேர்தல் வரலாம், ஆட்சி மாறலாம், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படலாம் என என்ன வேண்டுமென்றாலும் இந்த தீர்ப்பினால் அரங்கேறலாம். அப்படி இருக்கையில் இந்த வழக்கு இன்னும் நீடிப்பது ஏன்? 

  அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்காக இந்த வழக்கின் தீர்ப்பு காத்திருக்கிறதா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai