சுடச்சுட

  

  மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து

  By DIN  |   Published on : 15th June 2018 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  seladurai

  மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பி.பி.செல்லதுரை நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனு:
  மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான சீனிவாசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் தொடர்பாக மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் செல்லதுரை உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  சட்டவிரோதம்: அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. மேலும், பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இல்லாத செல்லதுரையை விதிகளுக்குப் புறம்பாக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமித்திருப்பது சட்ட விரோதமானது. இது பல்கலைக்கழக விதிகளுக்கு முரணானது.
  பல்கலைக்கழக காலிப் பணியிடங்களை துணைவேந்தர் செல்லதுரை தன்னிச்சையாக நிரப்பி வருகிறார். எனவே அவரது நியமனத்தை ரத்து செய்வதுடன், புதிதாக எந்தவொரு பணியிடங்களையும் நிரப்ப தடை விதிக்க வேண்டும்'' எனக் கோரியிருந்தனர்.
  தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை அளித்த தீர்ப்பு: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட பி.பி.செல்லதுரையின் நியமனத்தை ரத்து செய்கிறோம். அவர் பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளுக்குட்பட்டு துணைவேந்தராக தேர்வு செய்யப்படவில்லை.
  எனவே, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய மீண்டும் சிண்டிகேட், செனட் மற்றும் ஆளுநரின் பிரதிநிதிகள் அடங்கிய தேடுதல் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழு 3 மாத காலத்துக்குள் புதிய துணை வேந்தரை சட்டத்துக்குட்பட்டு பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை செல்லதுரை மீண்டும் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தால் அதனை சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும்'' என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
  மேல்முறையீடு செய்யப்படும்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக பேராசிரியர் பி.பி.செல்லத்துரை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai